By Village Missionary Movement
Thursday, 29-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 30-06.2023
மகிபனா? மனிதனா?
"…நீ… மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்;…" - மத்தேயு 6:5
ஒருசமயம் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தினரோடு பகத்சிங் என்ற தேவமனிதர் தங்கியிருக்க நேர்ந்தது. அப்பொழுது அவ்வீட்டில் காலை மாலை ஒழுங்காக குடும்ப ஜெபம் நடைபெற்றது. அதில் வேலைக்காரரும் பங்கு பெற்றனர். எனவே இக்குடும்பத்தினரைக் கண்டு மனமகிழ்ந்தார் ஊழியர். ஆனால் ஒரு நாள் ஒரு வேலைக்காரன் சொன்னதாவது,"வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கும்போது மாத்திரமே இக்குடும்ப ஜெபங்கள் நடைபெறும். அவர்கள் சென்றபிறகு இவை நடைபெறாது" என்றான். மனிதர்கள் மெச்சிக்கொள்ள வேண்டுமென்று எந்த ஆவிக்குரிய செயலில் ஈடுபட்டாலும் தேவன் அதை அங்கீகரிக்கமாட்டார். ஏனென்றால் நோக்கமே தவறாக இருக்கிறதே!
மனிதனுடைய திருக்குள்ள, பெருமையான, புகழை விரும்பும் இருதயத்தின் நிலையை தேவன் அறிந்திருந்ததினாலே, ஒவ்வொரு காரியத்தையும் குறிப்பாய் வேதத்திலே எழுதி நம்மை எச்சரிக்கிறார். தனது தானதர்மங்களை மனிதர் கண்டு தன்னை பாராட்டவேண்டுமென்று விரும்புகிறது உலகிலுள்ள எல்லா மனிதர்களின் இருதயமும். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம், நாம் ஜெபிப்பதைக் கூட மனிதர் காணவேண்டுமென்று விரும்புகிறோம். எவ்வளவு ஒரு பரிதாபமான ஆவிக்குரிய ஜீவியம் பார்த்தீர்களா? இப்படிப்பட்ட எண்ணத்தோடு நாம் இருப்போமென்றால், நம் ஜெப நேரத்தில் மனக்கண் முன் கர்த்தர் இருப்பாரா? அல்லது அந்த ஜெபக்குழுவில் உங்களைச் சுற்றியுள்ள மக்கள் இருப்பார்களா? கர்த்தர் இருப்பாரென்றால் அந்த ஜெபத்தில் வீண் வார்த்தைகளும், அதிக வசனிப்பும், அலங்கரிக்கப்பட்ட சொற்களும் இருக்காது. உள்ளம் மாத்திரம் தேவனை நோக்கி கதறும். சுற்றியிருப்பவர்களைக் குறித்த எண்ணமிராது.
தேவன் நமக்கு ஜெபிக்க கற்றுக்கொடுக்கும் முறை என்ன? நீ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் போய், கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கிப்பார். அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்கு பலனளிப்பார்" இதையே தேவன் எதிர்பார்க்கிறார். ஆனாலும் இப்படிப்பட்ட தனி ஜெபத்தைக் குறித்தும் பெருமை புகுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். "இன்று நான் இத்தனை மணிநேரம் ஜெபித்துவிட்டேன்" என்று பேச்சுவாக்கில் பிறர் அறிந்துகொள்ளும்படி பெருமையாய் பேசிவிடாதபடி கவனமாயிருப்போம். ஒருவேளை நாம் பேசிக்கொண்டிருக்கும் நபருக்கு அது பக்தி விருத்தியைக் கொடுத்து அவரது ஜெபவாழ்வையும் தட்டி எழுப்புமானால் அதை மிகுந்த தாழ்மையோடு கூறுவதில் எந்த தவறுமில்லை. ஆனால்,"நான் அறைவீட்டில் தனியாக ஜெபிப்பது நாலு பேருக்கு தெரியாமல் போய்விடக்கூடாது" என்ற எண்ணத்தோடு கூறுவோமானால் அதுவும் பிசாசின் ஒரு வஞ்சனைதான்.
பிரியமானவர்களே! மனிதருக்கு முன்பாக நம்மை நாமே உயர்த்த விரும்பவேண்டாம். வேதம் கூறுகிறது,"தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்."(2 கொரி. 10:18) நீங்கள் எந்த கட்சி?
மகிபனிடம் ஜெபிக்கிறீர்களா அல்லது மனிதர்களிடம் ஜெபிக்கிறீர்களா?
- Mrs.அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு
நமது வளாகத்திற்குள் சிமெண்ட் ரோடு போடப்பட வேண்டியது மிக அவசியமாய் உள்ளது. தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864