By Village Missionary Movement
Wednesday, 28-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 29-06.2023
தச்சன்
"அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்" - ரோமர் 12:5
மரவேலைகள் நடக்கும் தச்சுக்கூடம் அது. தச்சன் ஏதோ வேலையாக வெளியே கிளம்பினார். அவர் சென்றதுதான் தாமதம். அங்குள்ள அனைத்து உபகரணங்களும் கூடி தங்களுக்குள் யார் பெரியவன்? என்று ஒன்றை ஒன்று குறைகூறி விவாதிக்கத் தொடங்கின. சுத்தியலை நோக்கி மற்றவை கூறின,"நீ அதிகமாய் சத்தமிடுகிறாய். நீ இங்கே இருக்கக்கூடாது" என்றன. சுத்தியல்,"உளியைத்தான் விரட்டவேண்டும். அவன் கூர்மையாக எல்லோரையும் பதம் பார்க்கிறான்" என்றது. உளி கோபத்துடன் அளவுகோலை குறை கூறியது. "அவன் எப்பொழுதும் அப்படி இருக்கவேண்டும், இப்படி இருக்கவேண்டுமென்று ஒவ்வொருவரையும் அளந்து கொண்டேயிருக்கிறான்" என்றது. அளவுகோல் பதிலுக்கு,"திருப்புளியைத்தான் நம் ஐக்கியத்திலிருந்து விலக்கவேண்டும். அவன் பிறரை திருகிக்கொண்டே இருக்கிறான்" என்றது. கடைசியில் அனைத்தும் மரஇழைப்பைப் பார்த்து,"நீ மேற்போக்கான வேலைகளை மட்டும் செய்கிறாய். கடின வேலை ஒன்றும் செய்வதில்லை" என்று ஒன்றையொன்று குறை கூறிக்கொண்டிருந்தன. திடீரென்று தச்சன் வரும் சத்தம் கேட்டு அனைத்தும் அமைதியாயின. தச்சன் வந்தார். சுத்தியலையும் உளியையும் வைத்து ஒரு மரக்கட்டையை அழகாய் செதுக்கினார். அளவுகோலை எடுத்து சரிபார்த்தார். திருப்புளியையும், மரஇழைப்பையும் பயன்படுத்தி நேர்த்தியாக ஒரு சிலுவையைச் செய்தார். பின்பு அந்த சிலுவையில் தன்னைத்தானே மரிக்க ஒப்புக்கொடுத்தார்.
இந்த தச்சன் யார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. மேற்கண்ட உவமையை நம் வாழ்வில் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இதன் பொருள் என்னவென்றால் கிறிஸ்துவுக்குள் ஐக்கியமாயிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெலன் உண்டு; ஒரு சில குறைவுகளும் உண்டு. எல்லோரும் எல்லாரையும் போல இருக்கவேண்டுமென்ற அவசியமுமில்லை. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது.
நாம் வேலை செய்யும் ஸ்தலத்திலோ, ஒருவேளை ஊழியம் செய்தால் அந்த ஐக்கியத்திலோ, ஒவ்வொருவரும் வித்தியாசமாகத்தான் இருப்பர். தேவனே இப்படிப்பட்டவர்களை ஒன்று சேர்க்கிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். என்னைப் போல மற்றவர்கள் பணிகளை செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு. ஒரு பணியை செய்யத் தேவையான விதவிதமான நபர்களை தேவனே இணைத்திருக்கிறார். வேதத்திலே, கிறிஸ்துவின் சரீரத்திற்கு திருச்சபை ஒப்பிடப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக்கொள்வோம். குறுகிய மனப்பான்மைகளை மாற்றுவோம். அன்பினால் அகன்ற இருதயம் எப்பொழுதும் நமக்குள் இருக்கட்டும்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு
ஒவ்வொரு மாநிலத்திலும் 500 புதிய மிஷனெரிகள் நம் ஊழியத்தில் இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864