By Village Missionary Movement
Friday, 23-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 24-06.2023
இருக்கும் இடத்தில்
"சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்" - 1 கொரி 7:24
வனாந்தரத்திலே வளர்ந்திருந்த கள்ளிச் செடியிடம் அங்கு வந்த தென்றல் காற்று பேசியதாம், "நீ ஏன் இத்தனை கொடுமையான வனாந்தரத்தில் வாழ்கிறாய், வேறு ஏதாவது செழிப்பான இடத்திற்கு போய்விடு. இங்கு உனக்கு என்ன நன்மை கிடைக்கிறது?" என சொல்லிக் கொண்டிருந்ததாம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ஆந்தை தென்றல் காற்றிடம் சண்டைக்கு போனதாம். "நீ உன் வேலையை பார்த்துக் கொண்டு போகிறாயா? இந்த கள்ளிச் செடியின் நிழலில்தான் நான் சற்று நேரம் களைப்பாற்றிக் கொள்கிறேன். சிறுபாம்புகள் கூட தங்களை சுருட்டிக் கொண்டு இதன் நிழலில்தான் இளைப்பாறுகின்றன. இதுவும் இல்லையென்றால் இந்த சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எங்கள் கதி என்னாவது?" என்றது. இதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த கள்ளிச்செடி, "நான் வனாந்தரத்தில் இருந்தாலும் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்கிறேன் என்றால் அதுவே எனக்கு சந்தோஷம்" என்று மனதிற்குள் திருப்தியடைந்து கொண்டது.
நம் ஒவ்வொருவரையும் தேவன் தமது சித்தத்தின்படி ஒவ்வொரு இடத்தில் வைத்துள்ளார். அப்படி நாம் இருக்கும் இடத்தில் பிறருக்கு பிரயோஜனமாய் ஆசீர்வாதமாய் இருக்கிறோமா? என்பதை சிந்திப்பதே இன்றைய தியானம். வேதத்திலே, எஜமான் ஒருவன் தனது திராட்சத் தோட்டத்திலே, அத்திமரம் ஒன்றை நட்டிருந்தார். ஆனால் அந்த அத்திமரமோ தான் இருந்த இடத்தில் யாருக்கும் பயன்படாமல், தான் வைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாமல் கனிகளின்றி காணப்பட்டது. முடிவு, எஜமான் அதை வெட்டிப் போடும்படி தோட்டக்காரனிடம் சொல்லுகிறார்.
நாம் நம் குடும்பத்திற்கு, சபைக்கு, சமுதாயத்திற்கு ஆசீர்வாதமாய் இருக்கிறோமா அல்லது நம் நிமித்தம் நம் குடும்பமோ சபையோ அவமானமடைகிறதா? சிந்திப்போம். எந்த வசதியுமில்லாத வனாந்தரத்திலிருந்தாலும் கள்ளிச்செடி பிரயோஜனமாயிருந்தது. ஆனால் திராட்சத் தோட்டத்தில் நடப்பட்டு தோட்டக்காரனால் அனுதினமும் தண்ணீர் பாய்ச்சப்பட்ட அத்திமரத்தினிடமிருந்து எஜமான் எந்த கனியையும் புசிக்கவில்லை.
அன்பு வாலிபனே! நீ வசதியான குடும்பத்தில் பிறந்து நல்ல கல்லூரியில் படித்துக்கொண்டு பல தாலந்துகளை உடையவனா(ளா)யிருந்தும் யாருக்கும் பிரயோஜனமின்றி ஆசீர்வாதமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ? நீ அழைக்கப்பட்ட அழைப்பை சிந்தித்துப்பார். நீ இருக்கும் இடத்தில் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படியாகவே தேவன் அந்த இடத்தில் உன்னை வைத்திருக்கிறார். ஒருவேளை அது வளமுள்ள இடமாயிருக்கலாம் அல்லது வனாந்தரமாய் கூட இருக்கலாம். எந்த இடமானாலும் நீ இயேசுவோடு ஐக்கியப்பட்டிருப்பாயானால் நிச்சயமாய் பிறருக்கும் ஆசீர்வாதமாயிருப்பாய்.
- C.ஜெயகுமாரி
ஜெபக்குறிப்பு:
ராக்லாண்ட் வேதாகம கல்லூரியின் புதிய மாணவர் சேர்க்கைக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864