By Village Missionary Movement
Thursday, 01-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 01-06.2023
பாராட்டுவீர்! பலன்பெறுவீர்!
"…நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்" - நீதி.12: 25
வெளிநாட்டுப் பிள்ளைகளுக்கு, கண்விழி, நீல நிறம் அல்லது ப்ரௌன் நிறத்தில் இருக்கும். ஒரு பள்ளியில் பரிசோதனை ஒன்று நடத்தினார்கள். "நீல நிறக் கண்களையுடையவர்கள் நுண்ணறிவு மிக்கவர்கள், ஞானமுடையவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்" என ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். அந்த மாதம் நடத்திய தேர்வில் நீல நிறக்கண்களையுடைய பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள். சில மாதங்கள் கழித்து, ஆசிரியர் மாணவர்களிடம் "ப்ரௌன் நிறக் கண்களை உடையவர்கள் தான் அறிவில் சிறந்தவர்கள், நினைவாற்றல் மிக்கவர்கள் என நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள்" எனக் கூறினார். அதற்குப் பின் நடந்த தேர்வில் ப்ரௌன் நிறக் கண்களை உடையவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார்கள். பாராட்டுதல் நல்ல பலனைத் தரும் என்ற முடிவுக்கு வந்தார் ஆசிரியர்.
நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் பாராட்டுவதைப் பார்க்கலாம். பெத்தானியா மரியாளை, " நல்ல பங்கைத் தெரிந்து கொண்டவள்" என்றும், கானானிய ஸ்திரீயை, "உன் விசுவாசம் பெரிது" எனவும், நூற்றுக்கதிபதியின் விசுவாசத்தை அறிந்து, "இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் காணவில்லை" என்றும் இயேசுகிறிஸ்து பாராட்டுவதைப் பார்க்கலாம்.
பிள்ளைகள் கர்த்தர் கொடுத்த சுதந்திரம். நாம் அவர்களை கர்த்தருக்கென்று வளர்த்து வழி நடத்த வேண்டும். "உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி அவர்களுக்கு கோபமூட்டாதிருங்கள்" (கொலோ. 3:21) என்றும் வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. அதுமட்டுமல்ல, "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி சமுத்திரத்தின் ஆழத்தில் அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்" (மத். 18:6) என வேதம் நம்மை எச்சரிக்கிறது.
இது புதிய கல்வி ஆண்டின் துவக்கம். பெற்றோரும், ஆசிரியர்களும், பிள்ளைகளை உற்சாகப்படுத்தி, நல்ல வழியில் வழிநடத்த வேண்டும். பிள்ளைகள் மனமடிவடையும்படிக் கடிந்து கொள்ளுதல் கூடாது. மற்றவர்களோடு ஒப்பிட்டு மனதைப் புண்படுத்தக் கூடாது. பிள்ளைகளின் தாலந்துகள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். அவர்களிடம் உள்ள திறமைகளை, நற்குணங்களைப் பாராட்டுங்கள். சிறந்த பலனைக் காண்பீர்கள்.
- Mrs. வனஜா பால்ராஜ்
ஜெபக்குறிப்பு
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழி நடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864