By Village Missionary Movement
Thursday, 18-May-2023இன்றைய தியானம்(Tamil) 18-05.2023
“உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருகிறார்” - பிலிப்பியர் 4:5
கடும் கோடைகாலத்தில் கண் தேடிய இடமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மான் ஒன்று தவித்தது. தண்ணீரைத் தேடி அங்குமிங்கும் அலைந்தது. களைப்போடு தண்ணீரைத் தேடிக்கொண்டிருந்த அதன் கண்களில் ஒரு நீரோடை தெரிந்தது. தண்ணீரைக் கண்ட மான் வேகமாய் ஓடியது. அருகில் சென்றபோது வெறும் மண்ணைக் கண்டு ஏமாற்றம் அடைந்தது. அந்தோ! அது ஒரு கானல் நீர். ஆம், கொடுமையான கோடையில் காற்றில் ஏற்படும் வெப்பத்தின் மாறுபாட்டினால் இது தோன்றுகிறது.
வேதத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் உள்ளது. இயேசுவானவர் ஊழியம் செய்ய சென்றபோது தூரத்திலே ஒரு அத்தி மரத்தைக் கண்டு அதின் செழிப்பைப் பார்த்து, அதில் கனிகளை எதிர்பார்த்து ஆவலோடு அருகில் சென்றார். அந்தோ! அந்த மரத்தில் இலைகளைத் தவிர வேறு ஒன்றையும் காணாமல் ஏமாற்றம் அடைந்து அம்மரத்தை சபித்தார்.
நம்முடைய வாழ்க்கையும் அநேக நேரங்களில் வெறுமையான கானல் நீர் போன்று காணப்படுகிறது. சில நேரங்களில் நாம் வெளியில் பார்ப்பதற்கு செழிப்பாக தோற்றமளித்த அந்த அத்திமரத்தைப் போல் காணப்படுகிறோம். என்றோ ஒரு நாள் நம்முடன் பழகும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அண்டை வீட்டார்களுக்கும், ஆலயத்தில் உள்ள சக விசுவாசிகளுடைய பார்வையில் நாம் கனி நிறைந்தவர்களாகவும், தெளிந்த நீரோடை போலவும் காணப்படலாம். ஆனால் நம் அருகில் வந்து அவர்கள் பழக நேரிடும்போது தான் நமது உண்மையான கனியற்ற தன்மைகள் வெளிப்படும்.
முக்கியமாக, நம் வீட்டில் எப்பொழுதும் நம்முடன் இருக்கும் கணவன்-மனைவி, பெற்றோர், மாமியார்-மாமனார், பிள்ளைகளிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?அவர்கள் நம்மிடம் கனியைப் பார்க்கிறார்களா? நம் வீட்டில் உள்ளவர்கள் நம்மைப்பற்றி நற்சாட்சி கூற முடியுமா? ஒரு நிமிடம் யோசியுங்கள். ஆம், என்றால் உங்களது கிறிஸ்தவப் பயணம் சரியாகத் தான் சென்று கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நாம் வேஷமாகவே வாழ்கிறோம். கானல் நீரும், கனியற்ற அத்திமரமும் யாருக்கும் பயன்படாதது போல நமது வாழ்வும் பயனற்ற வாழ்வாகவே இருக்கும். சிந்திப்போம்!!
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் ஜெபங்கள் மற்றும் ஊழியங்கள் அனைத்திலும் தேவனுடைய வல்லமை வெளிப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864