By Village Missionary Movement
Tuesday, 09-May-2023இன்றைய தியானம்(Tamil) 09-05.2023
பேசலாமே!
“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” - நீதிமொழிகள் 25:11
புதிதாக திருமணமான ஒரு தம்பதியினர் கிராமத்திலிருந்து வேலையினிமித்தமாக பட்டணத்திற்கு சென்றார்கள். அவர்கள் குடியேறிய வீட்டில் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு கண்ணாடியையே பார்த்திராத அந்த நபர், அதில் தன் முகத்தைப் பார்க்கும்போது தன்னுடைய அப்பாவைப் பார்ப்பது போன்று இருந்தது. அவருக்கு மிகுந்த சந்தோஷம்! ஆகவே தினமும் காலையில் எழுந்தவுடன் நேராக கண்ணாடியின் முன் நின்று தன் அப்பாவைப் பார்ப்பதாக எண்ணிக் கொண்டு மகிழ்ச்சியோடு வேலைக்கு செல்வான். இதை சில நாட்களாய் கவனித்த மனைவி, ஒருநாள் கணவன் வேலைக்கு சென்றபின் கண்ணாடியை வந்து பார்த்தாள். அதில் ஒரு அழகிய பெண்ணின் முகம் தெரிந்தது. அதிர்ந்து போனாள், அந்த நிமிடத்திலிருந்து கணவன் மீது அவளுக்கும் சந்தேகம் வந்துவிட்டது. அவளது உள்ளத்தில் நிம்மதி பறிபோனது. வீட்டு வேலையைக் கூட சரியாக செய்யமுடியாமல் மனம் புழுங்கி காணப்பட்டாள். ஒருநாள் தாங்கிக் கொள்ள முடியாமல் பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் தன் வீட்டு நிலையை கொட்டினாள். விபரம் அறிய வீட்டிற்குள் வந்த பாட்டி, சிரித்து விட்டு இருவர் முகத்தையும் கண்ணாடியில் பார்க்கும் படி செய்து, இது கண்ணாடி, அதன் முன் நிற்பவர் முகம் தான் அதில் தெரியும் எனக் கூறினாள். கணவன், மனைவி இருவரும் எல்லா சந்தேகங்களையும் ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். முதல் நாள் உன் கணவனின் செயலைக் கண்டபோதே இதைக் குறித்து விசாரித்திருந்தால் பிரச்சனையே இருந்திருக்காதே என கூறி சென்றார் பாட்டி.
ஈசாக்கு, ரெபெக்காள் என்ற தம்பதியினரைக் குறித்து ஆதியாகமத்திலே வாசிக்கிறோம். அவர்களுக்கு ஏசா, யாக்கோபு என்ற இருபிள்ளைகள் இருந்தனர். இப்பிள்ளைகளை வளர்ப்பதிலும், நேசிப்பதிலும் ஒருவருக்கொருவர் பேசி ஒருமனதாய் இருப்பதை விட்டுவிட்டு, தகப்பன் ஒருவனையும், தாய் இன்னொருவரையும் நேசித்தனர். இந்த மனப்பான்மையினால் பின்நாட்களில் இருபிள்ளைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவன் மற்றவனைக் கொலை செய்ய வேண்டுமென்று எண்ணும் அளவிற்கு வளர்ந்து விட்டது.
அன்பான தம்பதியினரே! உங்கள் வாழ்க்கை எப்படி? அன்றாட வேலையோ, எதிர்காலத் திட்டமிடலோ, பிள்ளைகளின் படிப்போ, வரவு செலவோ, எதையும் ஒருவரோடொருவர் பேசி, காரியங்களைப் பகிர்ந்து கொள்வோம், அமைதியாகவே இருந்து கசப்புகளை வளர்த்துக் கொண்டேயிருப்போமானால், வீண் பிரச்சனைகளும், சந்தேகங்கள், பிரிவினைகளும்-தான் ஏற்படும். கர்த்தர் நம்மை விசாரிக்கிற போது ஒருவருக்கொருவர் விசாரித்து நம்முடைய குடும்பங்களையும் அன்பினால் கட்டுவோம்.
- Mrs. அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவி மூலமாய் சந்திக்கப்படும் நபர்கள் ஒவ்வொருவரும் தேவனின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864