By Village Missionary Movement
Saturday, 29-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 29-04.2023
நயாகரா நீர்வீழ்ச்சி
“முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்” - நீதிமொழிகள் 23:32
நயாகரா என்பது அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள புகழ்மிக்க ஒரு நீர்வீழ்ச்சி. இது உலகத்திலே உள்ள அற்புத காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனைப் பார்க்க பத்து மில்லியன் மக்கள் வருகிறார்கள். சுமார் 56 கி.மீ நீளமுள்ள ஆற்றின் பாதியில் குதிரை லாட வடிவில் இந்த அருவியானது அமைந்துள்ளது. இந்த அருவி 55 மீ உயரமும் 305 மீ அகலமும் கொண்டது. அழகிற்கு பெயர் போன இந்த அருவியில் பல சமயங்களில் இறந்து போன விலங்குகளின் உடல்கள், மரக்கிளைகள், கற்கள் கூட அடித்து வரப்படும். அப்படி ஒரு முறை செத்த கரடியானது அடித்து வரப்பட்டது. அமெரிக்காவில் பல இடங்களில் பெரிய வகை கழுகுகள் உள்ளன. அவற்றில் ஒரு கழுகு அந்த கரடியின் உடல் மீது அமர்ந்து இறந்த கரடியின் சதையை கொத்தி சுவைத்துக் கொண்டு இருந்தது. மிகக் குறுகிய நேரத்தில் அடித்து வரப்பட்ட கரடியின் உடல் அருவியை நோக்கி நகர்ந்து வந்ததை இந்த கழுகும் திரும்பிப் பார்த்தபடியே சுவைத்துக் கொண்டிருந்தது. அந்த கழுகு நினைத்தது எப்படியாவது அருவி வருவதற்குள் அதிகமாக சாப்பிடலாம் என்றும், அப்படியே அருவி வந்துவிட்டால் தன் பலமான இறக்கைகளைப் பயன்படுத்தி பறந்து விடலாம் என்றும் நினைத்தது. அந்தோ பரிதாபம்! அக்கழுகின் மரணம் மிக அருகில் வந்ததை உணரவில்லை. அருவி அருகில் வந்த போது அது நினைத்தபடி பறக்க முற்பட்டது. பாவம் அதன் கால்கள் செத்த கரடியின் உடலில் நன்றாக பதிந்து போனதால் அந்த செத்த உடலோடு அருவியில் அடித்துச் செல்லப்பட்டு மாண்டுபோனது.
அருமையான வாலிபத் தம்பி தங்கைமாரே, நம் வாழ்விலும் பாவமும் முதலில் சுவை உள்ளதாகவும் நேரம் போவதே தெரியாதபடி பல தீமையான காரியங்களாக வெளிப்பட்டு பின் அவற்றிலிருந்து மீள முடியாமல் சிக்க வைத்து தேவனை விட்டே தூரமாய் செல்லுகிற நிலைக்கு கொண்டு வந்துவிடும். வேதமும் கூட யாக்கோபு 1: 14- 15 ஆகிய வசனங்களில் “அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தை பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும் போது மரணத்தை பிறப்பிக்கும்” என எச்சரிக்கிறது. நீங்கள் சிக்கியிருக்கும் பாவ காரியம் என்ன? நீங்கள் வெளியே வர முயன்றும் முடியாமல் தவிக்கிறீர்களோ? ஆண்டவர் உங்களுக்கு உதவ வல்லவர். அவர் உங்கள் கால் சிக்கிக் கொள்ளாதபடி காப்பர் அவரே உங்களை விடுவிக்க வல்லவர். அவரை விசுவாசியுங்கள்.
- Mrs. ஜெயந்தி பாக்கியநாதன்
ஜெபக்குறிப்பு:
நாளை மறுநாள் நடைபெறும் எழுப்புதல் வாலிபர் முகாமிற்கான கால சூழ்நிலைகளை தேவனே பொறுப்பெடுத்துக் கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864