By Village Missionary Movement
Friday, 21-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 21-04.2023
முடங்கிவிடாதே முன்னேறு
“...அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்” - 1 சாமுவேல் 30:8
ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்த அலெக்ஸாண்டர் டஃப் இந்திய தேசத்திற்கு சுவிசேஷத்தை அறிவிக்க புறப்பட்டார். கடல் பிரயாணத்தில், தன் உடைமைகள், சான்றிதழ்களை கப்பல் சேதத்தில் இழந்தார். நீ மிஷனெரி பணிக்கென சென்றது தேவனுக்கு சித்தமல்ல. அதனால் தான் இத்தனை போராட்டங்கள் என்றனர் மக்கள். ஆயினும் மனம் தளராமல் இந்தியா வந்து இறங்கி உயர்குல மக்கள் கர்த்தரை அறிய, மேற்கத்திய கலை. அறிவியல். ஆங்கிலம் இவற்றோடு வேதத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பித்தார். ஆனால் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆயினும் 5 மாணவர்களுடன் ஆலமரத்தடியில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்குள் 300 மாணவர்கள் சேர்ந்தனர். பின் உயர்குலப் பெண்களுக்கென ஒரு பள்ளியை ஆரம்பித்தார். அதிலும் பலர் விருப்பத்தோடு பயின்றனர். 3 வருடங்களில் 3 பேர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர். 800 பேர் பள்ளியில் சேர்ந்து பயின்றனர். சில மாதங்களுக்குள் 33 பேர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர். இவர்கள் மிஷனெரிகளாகவும், திருச்சபையின் தலைவர்களாகவும் மாறினார்.
டஃப் இழப்பின் மத்தியிலும், எதிர்ப்பின் மத்தியிலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் தொடர்ந்து செயல்பட்டார். அதன் விளைவு, மக்களின் அறியாமை இருள் விலகியது. கர்த்தரைக் கண்டனர். ஆங்கிலக் கல்வி இந்தியாவிற்குள் வந்தது.
வேதத்திலும் கூட தாவீது மற்றும் அவரோடிருந்தவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். தங்களுக்குப் பெலனில்லாமல் போகும் வரை எல்லோரும் அழுதனர். தாவீது கர்த்தருக்குள் தன்னை
திடப்படுத்திக் கொண்டு ஜெபிக்கிறார். தேவன் ”பின் தொடர், முடங்கி விடாதே, தொடர்ந்து போ, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய்” என்கிறார். தாவீதோடு சென்றது சிறு கூட்டமே, ஆயினும் எல்லாவற்றையும் திருப்ப தேவன் உதவி செய்தார்.
ஆம், இழப்புகளில் உங்களிலுள்ள வெற்றிடத்தை ஆறுதலின் தேவன் தான் நிரப்ப வேண்டும். அவர் நிரப்பினால் மட்டுமே நம் ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஜெயமாக ஓட முடியும். எதிர்ப்பு, போராட்டத்தின் நிமித்தம் நீங்கள் செய்யும் செயலை விட்டு, உங்கள் இலட்சியத்தை விட்டு பின்வாங்காதீர்கள். உங்கள் நோக்கமெல்லாம் உங்கள் இலட்சியத்தை அடைவதாகவே இருக்க வேண்டும். எதிர்ப்பு, போராட்டத்தின் மீது உங்கள் பார்வை படக்கூடாது. உங்கள் வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது. மனம் தளராமல் முன்னோக்கிச் செல்லுங்கள்.
- Mrs. ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
குறைந்த வாடகைக்கு வேன்கள் கிடைக்க, வாகன ஓட்டுநர்கள் வேன்களை கவனமாக ஓட்ட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864