By Village Missionary Movement
Saturday, 01-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 01-04.2023
நாம் உணர்வுள்ளவர்களா?
“அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்...” - லூக்கா 23: 34
இயேசு சிலுவையில் மொழிந்த முதலாம் வார்த்தை:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட காரணம் யார்? அல்லது எது? என்று சிந்தித்தால், ஏசாயா 53:5ல் அதற்குரிய பதிலைக் காணலாம் “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” ஆகவே நானும், நீங்களும் உட்பட இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறதற்கு காரணமாயிருக்கிறோம். அதே நேரத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது, “பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று யாருக்காக பரிந்துபேசுகிறார்?
அன்றைக்கு வாழ்ந்த யூதர்கள், குறிப்பாக பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் தான் இயேசு கிறிஸ்துவை திட்டமிட்டு தந்திரமாக சிலுவையிலறைந்தனர். யூதாஸ்காரியோத்துக்கு பணம் கொடுத்ததிலிருந்து பிலாத்துவை உடன்பட வைத்ததுவரை இவர்களே காரணம் என்பதை நாம் அறிவோம். தேவனைத் தேடி, வேத வசனங்களை ஆராய்கிற இப்பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசு கிறிஸ்துவின் காரியத்தில் தாங்கள் செய்தது நூற்றுக்கு நூறு சரிதான் என்று நினைத்தனர். அதனால்தான், “தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமலிருக்கிறார்கள்” என்று நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பிதாவிடம் இவர்களை மன்னிக்குமாறு ஜெபிக்கிறார்.
நம் ஆண்டவர் சிலுவையில் மொழிந்த மேற்கண்ட வார்த்தைகள் நமக்கு உணர்த்தும் கருத்து என்னவென்றால், நாம் நம்முடைய பார்வையில் நூற்றுக்கு நூறு சரி என்று எண்ணச் செய்யும் சில விஷயம் கூட தேவனுடைய பார்வையில் நூற்றுக்கு நூறு தவறாயிருக்கலாம். இப்படிப்பட்ட காரியங்களை தேவன் நமக்கு தயவாய் மன்னிக்கிறார். இருப்பினும் நாம் இப்படி எந்த காரியங்களில் உணர்வில்லாமலும், அறியாமலும் இருக்கிறோம் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். “வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்” என்று சங்கீதக்காரன் 139: 24ல் ஜெபிப்பது போல ஜெபிக்கவேண்டும். குறிப்பாக நாம் செய்யும் எந்தக் காரியமானாலும் நம் அறிவின்படியல்ல, ஆண்டவரின் பார்வைக்கு சரியானதா என சிந்தித்து செயல்படவேண்டும். இதை அறியக்கூடிய உணர்வுள்ள இருதயத்தை நாட வேண்டும். மேலும் வேதத்திலிருந்தும் மற்றவர்கள் மூலமாகவும் நம்முடைய குறைகளைக் கண்டறிந்து சரி செய்ய பிரயாசப்பட வேண்டும்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவ கரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864