By Village Missionary Movement
Thursday, 23-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 23-03.2023
இயன்றதைச் செய்யுங்கள்
“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;..” - பிரசங்கி 9 :10
ஆப்பிரிக்காவிற்கு மிஷனெரியாக சென்ற ஊழியர், தன்னால் வழிநடத்தப்பட்ட ஒரு வயதான பெண் எவ்வாறு இரட்சிக்கப்பட்டார் என்றும், எவ்வாறு ஊழியம் செய்தார் என்பதைக் குறித்தும் எழுதிய சாட்சி என்னை அசைத்தது.
அப்பெண்ணிற்கு கண்களும் தெரியாது, ஆகவே படிக்கவும் தெரியாது. இருந்தாலும் தான் அறிந்து கொண்ட இயேசுவை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். ஆகவே தன்னை இயேசுவுக்கு நேராக வழிநடத்திய அந்த மிஷனெரியிடம் சென்று பிரெஞ்ச் வேதாகமத்தைக் கேட்டு வாங்கினாள். அவள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்த வேதாகமத்தில் யோவான் 3 :16 ஐ சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு குறித்துத் தருமாறு சொன்னாள். பிறகு அந்தப் பக்கத்தை எளிதில் திறக்குமாறு ஒரு அடையாளத்தையும் வைத்துக்கொண்டாள். எழுதப் படிக்கத் தெரியாத, கண் தெரியாத அந்த மூதாட்டி பிரெஞ்ச் வேதத்தை வைத்து என்ன செய்யப் போகிறாள் என்று அறிந்துகொள்ள அவளுக்கு பின் சென்றார் அந்த மிஷனெரி. அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு முன் பிள்ளைகள் வீடு திரும்பும் நேரத்திற்கு சரியாக சென்று நிற்பாள். பிறகு அதில் ஒரு மாணவனை உதவிக்காக கூப்பிட்டு, “உனக்கு பிரெஞ்ச் வாசிக்கத் தெரியுமா” என்று கேட்பாள். “தெரியும்” என்று அந்த மாணவன் சொன்னால் சிவப்பு கோடிட்டு இருக்கும் அந்த வசனத்தை வாசித்துக் காண்பிக்கும்படி கேட்பாள். பின் அந்த வசனத்திற்கான அர்த்தத்தையும் சொல்லிக் கொடுப்பாள். இதுபோன்று சோர்வின்றி தொடர்ந்து செய்து 25 போதகர்களை உருவாக்கியிருக்கிறாள். இருக்கிறவைகளை புதைத்து விட்டு இல்லாதவைகளுக்காக ஆண்டவரை குறை கூறும் மக்கள் மத்தியில் இந்த பெண்மணியின் வாழ்க்கை நமக்கு ஒரு சாட்டையடி.
நாம் அநேக நேரங்களில் இப்படி யோசிப்பதுண்டு, “அவர்களைப் போல எனக்கு ஊழியம் செய்ய தெரியவில்லை. இவர்களைப்போல பிரசங்கிக்க முடியவில்லை” என்று எண்ணுகிறோம். வேதத்தில் ஒரு அழகான வார்த்தை இருக்கிறது. “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” என்று. நாம் ஒவ்வொருவரும் நம்மால் எதை செய்ய முடியுமோ அதை செய்யவே அழைக்கப்படுகிறோம். மேற்கண்ட உண்மை சம்பவத்தில் கண்தெரியாவிட்டாலும் தன்னுடைய விடாப்பிடியான ஜெபத்தோடு கூடிய பிரயாசத்தினால் அனைவரையும் ஆதாயப்படுத்திய சம்பவத்தை பார்க்கிறோம். நீங்களும் உங்களுக்கு எது முடியுமோ அதை விசுவாசத்தோடு செய்ய ஆரம்பியுங்கள். அந்த அற்ப ஆரம்பம் பெரிய விளைவை ஏற்படுத்தும்.
- S. பாஸ்கர் ரூபன்
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள்
வாங்க தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864