By Village Missionary Movement
Wednesday, 03-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 03-03-2021
உத்திரம் உன் கண்ணில்!
“நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” – மத்தேயு 7:3
அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் வசித்து வந்தனர் ஒரு குடும்பத்தினர். ஒரு மாலை நேரத்திலே கணவன்-மனைவி இருவரும் பெரிய கண்ணாடி ஜன்னலருகேயுள்ள நாற்காலியில் அமர்ந்து தேநீர் அருந்திக் காயப்போட்டிருந்த துணிகள் ஜன்னல் வழியாய் இவர்களின் கண்களில் பட்டது. அனைத்து துணிகளும் மிகவும் அழுக்காய் தெரிந்தது. கணவன் மனைவியிடம், “நமது எதிர் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு சுத்தம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. துணிகளை இவ்வளவு அழுக்காக வைத்திருக்கிறார்களே” என்றார். உடனே மனைவி, “ச்சே...ச்சே.... நம்மை போல சுத்தம் எந்த வீட்டிலும் பார்க்க முடியாது. இவர்கள் என்ன மனிதர்களோ?” என்று கூறினாள். சற்று நேரத்தில் இவர்களது வீட்டு வேலைக்காரி வந்து ஜன்னல் கண்ணாடியை நன்றாக துடைத்து விட்டுப் போனாள். கணவன்-மனைவிக்கு பெரிய அவமானமாய் போய்விட்டது. காரணம் இவர்களது பெரிய கண்ணாடியில்தான் அழுக்கு இருந்துள்ளது. துணிகள் சுத்தமாய்தான் இருந்தன.
பரிசுத்த வேதாகமத்தில் மத்தேயு 7-ம் அதிகாரத்தின் முதல் 5 அற்புதமான வசனங்களை படித்துப்பாருங்கள். நம் கண்ணிலிருக்கிற உத்திரத்தை பார்க்க இயேசு நமக்கு போதிக்கிறார். எப்போதுமே நமது பக்கம் உள்ள பெரிய தவறை உணராமல், எப்படியாவது பிறர்மீது குற்றம் சாட்டிவிட வேண்டும் என்று துடிப்பது மனித இயல்பு. ஆனால் இது பரிசுத்த வேதாகமத்திற்கு ஏற்புடையது அல்ல. நம்மிடம் உத்திரம் போன்ற பெரிய குறை இருக்கும் போது அதைப் பொருட்படுத்தாமல், மற்றவர்கள் கண்ணில் உள்ள சிறிய துரும்பை எடுத்துப்போட வகை தேடக் கூடாது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் காலத்தால் அழியாதது, நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாய் இருக்கக்கூடியது. நமது கையின் ஒரு ஆள்காட்டி விரலால் மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்கும்போது மூன்று விரல்கள் நமது பக்கம் இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! இயேசு கிறிஸ்துவைப் போல் வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் பிறரை குற்றப்படுத்தாமல் இருக்கலாமே! வேதம் சொல்லும் இந்த நடைமுறைப் பயிற்சிக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். நமது பக்கம் உள்ள பெரிய பெரிய தவறுகளை சரிசெய்ய முதலில் பிரயாசப்படுவோம். பிறர் பக்கமுள்ள சிறிய தவறுகள் மாற ஜெபிப்போம். இவ்வாறாக, நம்மை அநேகருக்கு முன்பாக ஒரு நடைமுறை கிறிஸ்தவனாக, அதாவது நடைமுறை வாழ்க்கையில் கிறிஸ்துவை உடையவர்களாக காட்டுவோம். நம் வாழ்வின் மூலம் தேவன் மகிமைப்படுவார்.
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
லெந்துகால கூடுகைகளில் சகோ. டேவிட் கணேசன் அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250