By Village Missionary Movement
Sunday, 26-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 27-02.2023
படைப்பின் மாட்சிமை
"எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்." – சங்கீதம் 8:1
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன், நான் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு டிரெய்னிங் ப்ரோக்ராம் ஒன்று நடத்தப்பட்டது. அதற்கு இந்தியா முழுவதிலுமிருந்து பலர் கலந்து கொண்டனர். நாங்கள் தங்குவதற்கென்று சென்னை கடற்கரை ஓரமாய் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அங்கு வந்தவர்களில் சிலர் வட இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அதுவரை கடலைப் பார்த்ததில்லை. டிவியும் பயன்பாட்டில் இல்லாத காலம். ஆகவே அவர்கள் கடலைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். அதிகாலையிலேயே எழுந்து நடந்து சென்று கடலின் அற்புத அழகை, சூரியன் உதிக்கும் அழகை, வானின் வர்ணக் காட்சிகளை, பிரமிக்க வைக்கும் கடல் அலைகளை, அவைகள் கரையில் மோதும் அழகைக் கண்டு வியந்து போனார்கள். நான் அதுவரை அடிக்கடி கடலைப் பார்த்திருந்தாலும், அவர்கள் சொன்ன பின்பு தான் அதன் அழகு இன்னும் பெரிதாகத் தோன்றியது.
பிரியமானவர்களே! நம்மைச் சுற்றியிருக்கிற தேவனுடைய படைப்பை நன்றியுள்ள இருதயத்தோடு பார்க்கிற அனுபவம் நமக்கு உண்டா? தாவீது ராஜா மேய்ப்பனாய் தன்னுடைய தகப்பனின் ஆடுகளை மேய்த்த காலத்திலே, தேவனைத் தேடி, தியானித்து அவருக்குள் களிகூருகிற அனுபவத்தைப் பெற்றிருந்தார். சங்கீதம் 8:1ல், ”எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!” என்று பூரித்து
சொல்லுகிறார். மூன்றாம் வசனத்தில் தேவன் உண்டாக்கின வானம், சந்திரன், நட்சத்திரங்களைப் பார்த்து பிரமித்து, இத்தனையும் படைத்த பெரிய தேவன் தன்னையும் நினைத்து விசாரிக்கிறாரே என்று எண்ணி ஆண்டவரைத் துதிக்கிறார்.
நீங்கள் என்றாவது நட்சத்திரத்தையோ, நிலாவையோ, கடலையோ பார்த்து ரசித்து இதைப் படைத்த ஆண்டவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்று யோசித்ததுண்டா? இப்படிப்பட்ட ஒரு இருதயம் இல்லாவிட்டால் நாம் அன்றாட வேலையில் மூழ்கினவர்களாய், தேவனுடைய மகத்துவங்களைத் தியானிக்க திராணியற்றவர்களாய், நன்றியில்லாத இருதயமுள்ளவர்களாய் மாறிவிடலாம். இவையெல்லாம் சாதாரண விஷயங்கள் என்று நம்மைச் சுற்றியுள்ள, கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட தேவனுடைய கிரியைகளை எண்ணிப் பார்ப்போம். நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்றை நினைத்து கவலைப்படாமல், நமக்காக தேவன் படைத்து வைத்திருக்கும் பெரிய மகத்துவங்களை ஆசையாய் கண்டு, ஆண்டவரைத் துதிக்கக் கற்றுக் கொண்டால் நலமாயிருக்கும்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
தமிழ்நாட்டில் ஆலயம் இல்லாத ஆயிரம் கிராமங்களில் திருச்சபை கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864