By Village Missionary Movement
Thursday, 09-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 09-02.2023
வேதத்தின் மகத்துவம்
"உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்" – சங்கீதம் 119:101
பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த நாத்திகன் இங்கர்சாலும் அவன் நண்பர்களும் கிழக்கத்திய நாடுகளைச் சுற்றிப் பார்க்கப் பயணம் மேற்கொண்டு இருந்தார்கள். அநேக நாடுகளின் தீவுகளை சுற்றிப் பார்த்தார்கள். ஒரு சிறிய தீவிலுள்ள மரத்தின் கீழ் ஒரு வாலிபன் வேதபுத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். அவனருகே சென்ற இங்கர்சால், "ஏன் தம்பி கட்டுக் கதைகள் நிறைந்த ஒன்றுக்கும் உதவாத பழங்காலப் புத்தகத்தை படிக்கிறாய்? அதை தூக்கி எறி, நான் கொடுக்கும் இந்த விஞ்ஞானப் புத்தகத்தை படி உன் அறிவு வளரும், உன் வாழ்வுக்கும் பிரயோஜனமாக இருக்கும்" என்றார். வாலிபன் இங்கர்சாலை ஏற இறங்கப் பார்த்துவிட்டு , "இந்த வேத புத்தகத்தை தூக்கி எறியச் சொல்கிறீர்கள், இப்புத்தகம் எங்களிடம் வராமலிருந்தால் இந்நேரம் உங்கள் அனைவரையும் கொன்று, வேகவைத்து சாப்பிட்டிருப்போம்" என்றானாம். நரமாமிசம் உண்ணும் மனிதர்களை நாகரீகமாக மாற்றியது வேதம்.
பாவம், அக்கிரமம், மீறுதல்கள், அநியாயங்களினால் அடிமைப்படுத்தப்பட்ட மனிதனை மாற்றவல்லது வேதவார்த்தைகள். தேவன் நமக்கு அருளியிருக்கின்ற பெரிய ஈவுகளில் ஒன்று வேதம். பண்டைய உலகு விபச்சாரம், வேசித்தனம், ஜாதி வேறுபாடுகள், கொலை, கொள்ளை நிறைந்ததாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் அதாவது வேதத்தை கையிலேந்தி சென்ற விலையேறப் பெற்ற மிஷனெரிகளால் உலகம் நாகரீகமாக மாறியது என்பது எல்லா சரித்திர ஆசிரியர்களும் ஒத்துக்கொள்ளும் ஒரு உண்மை. பாவ இருளிலிருந்த ஜனங்கள் வேத புத்தகத்தின் மூலம் இயேசுகிறிஸ்து என்ற மெய்யான ஒளியைக் கண்டு இரட்சிப்படைந்தார்கள்.
வேதத்தின் கருத்துக்கள் யூகமாகக் கூறப்படாமல் அதிகாரத்தோடு, ஆணித்தரமாகக் கூறப்பட்டுள்ளன. உலகை மாற்றின உன்னதப் புத்தகம் வேதம். வேதத்தை நேசித்து, வாசிப்பவர்கள் பரிசுத்த வாழ்வு வாழ முடியும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அனுதினமும், "வேதம் முழுவதும் தேவனுடைய வார்த்தை" என்ற விசுவாசத்துடனும் வாஞ்சையுடனும் வாசித்து, பரிசுத்தம் பெற்று வாழ தேவன் அழைக்கிறார்.
எனக்கன்பானவர்களே, பாவ இருளிலிருந்த உங்களையும், என்னையும் மீட்டெடுத்த இயேசுராஜாவின் வார்த்தைகளை நேசித்து, வாசித்து, சுவாசித்து, தியானிப்போமா? உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது. உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன் (சங்கீதம்119:140). தேவ கிருபை நம்மைத் தாங்குவதாக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
“ஆமென் கிராமிய டிவி” என்ற நமது 24 மணி நேர டிவி சேனலின் ஆயத்த வேலைகளில் தேவனுடைய தயவும் ஒத்தாசையும் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864