By Village Missionary Movement
Friday, 13-Jan-2023இன்றைய தியானம்(Tamil) 13-01.2023
வேதாகமம் தேவை
“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது…’’ - சங்கீதம் 19:7
1784ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேல்ஸ்நாட்டில் பிறந்தார் மேரி ஜோன்ஸ். தனது 4- வது வயதில் தன்னுடைய தகப்பனாரை இழந்ததினாலும் அப்பொழுது வேல்ஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினாலும் மேரியின் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. தன்னுடைய தாயாருடன் ஆலயத்திற்கு தொடர்ந்து செல்லும் பழக்கம் இருந்ததால் எட்டு வயதிலேயே ஆண்டவருடைய அன்பிலே நிரப்பப்பட்டாள். அந்த சபையும் அவரை அங்கத்தினராக ஏற்றுக்கொண்டது. அந்த நாட்களிலே சொந்த வேதாகமம் என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருந்ததில்லை. ஆலயத்தில் ஒரு வேதாகமம் மற்றும் அந்த ஊரிலிருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் ஒரு வீட்டிலும் மட்டுமே வேதாகமம் இருந்தது. மேரி வாரத்திற்கு ஒரு முறை அந்த வீட்டிற்கு 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வேதத்தை ஆர்வமுடன் வாசிப்பாள். எனக்கென்று ஒரு வேதாகமம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தாள். அதை நான் தினமும் வாசிக்க முடியுமே என்று ஏங்கினாள். தன்னுடைய 10 வயதிலிருந்து 16 வயது வரை 6 வருடங்களாக சிறுக சிறுக பணம் சேமித்தாள். ஒரு வேதாகமம் வாங்க போதுமான பணம் கிடைத்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். ஆனால் வேதாகமம் வாங்குவது இன்னும் சிரமமாகத்தான் இருந்தது. வேதாகமம் கிடைக்கவில்லை,
42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வலா என்ற இடத்திலுள்ள தாமஸ் சார்லஸ் என்பவரிடம் வேதம் இருப்பதை அறிந்து வெறும் காலுடன் நடந்து 42 கிலோமீட்டர் சென்று தாமஸ் சார்லஸ் இடத்தை அடைந்தாள். தனக்கு ஒரு வேதாகமம் வேண்டும் என்று கேட்டாள். தன்னிடத்திலுள்ள வேதம் எல்லாம் விற்பனையாயிற்று என்று அவர் சொல்லவே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். மேரியிடம் வேதத்தின் மீதிருந்த அன்பை கண்ட தாமஸ் ஏற்கனவே பணம் கொடுத்த ஒருவர் வாங்கிய வேதம் என்னிடம் இருக்கிறது. அதை நீ வைத்துக்கொள் என்று சொன்னதும் மேரி அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இப்பொழுது எனக்கென்று வேதாகமம் கிடைத்து விட்டது. இனிமேல் என் மக்கள் எல்லோருக்கும் வேதத்தை கற்றுக் கொடுப்பேன் என்று சந்தோஷத்துடன் சென்றாள். இந்த சம்பவம் தாமஸ் சார்லஸ் அவர்களின் உள்ளத்தில் வேதாகமம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்கிற தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் உருவானது தான் பைபிள் சொசைட்டி. 1907 ம் ஆண்டுக்குள் 20 கோடியே 40 இலட்சம் வேதாகமங்களும், புதிய ஏற்பாடுகளும் உலகத்தின் பல இடங்களில் விநியோகம் செய்யப்பட்டன.
பிரியமானவர்களே, இன்று நம் கையில் இருக்கும் வேதாகமம் எவ்வளவு அருமையானது. ஆனால் நம்மில் அநேகர் வேதத்தை தினமும் வாசிப்பதில்லை. ஆண்டவர் நமக்கு கொடுத்த வேதத்தை நேசிப்போம், தியானிப்போம் அதன்படி நடப்போம். நாம் வழிநடத்தும் பிள்ளைகளுக்கு முதலில் புதிய ஏற்பாடு பின் முழு வேதாகமமும் வழங்கி, வேதத்தை வாசிக்க அவர்களை உற்சாகப் படுத்துகிறோம். ‘’வேதாகமங்கள் தேவை’’ என்று நமது பத்திரிக்கையில் தெரிவித்திருப்பதைப் பார்க்கும் அநேக தேவப்பிள்ளைகள் வாங்கிக் கொடுக்கும் வேதாகமங்களை பணிதளத்தில் தினந்தோறும் வழங்கி வருகிறோம். வேதத்தை வாங்குபவர்களின் வாழ்வு கிறிஸ்துவுக்குள் கட்டப்பட ஜெபியுங்கள்.
- D. ஆல்வின் ஜேக்கப்
ஜெபக்குறிப்பு:
24 மணி நேர சங்கிலித் தொடர் ஜெபத்தின் மூலம் ஊழியத்திலும், தேசத்திலும் எழுப்புதல் உண்டாக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864