By Village Missionary Movement
Sunday, 08-Jan-2023இன்றைய தியானம்(Tamil) 09-01.2023
யோசுவாவே எழும்பு
“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து,’’ - மத்தேயு 28:19
இங்கிலாந்து தேசத்தில் பிறந்த ஹட்சன் டெய்லர், தன் நம்பிக்கையற்ற இளமைப்பருவத்தில் சுவிசேஷ பிரதியின் மூலம் ஆண்டவரை அறிந்து கொண்டு இரட்சிக்கப்பட்டார். பின்பு சீனாவிற்கு மிஷனெரியாக செல்ல அழைப்பு பெற்றார். 1853ல் தனது 21ம் வயதில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு சீனாவிலுள்ள ஷாங்காய் சென்றடைந்தார். சீனாவில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் இரட்சிக்கப்படவேண்டும் என்கிற தாகம் அவருக்கு இருந்தது. பெலவீனத்தால் இங்கிலாந்தில் இருந்த நேரத்தில் மருத்துவப் படிப்பை முடித்து, சீனாவின் உள்நாட்டு மிஷன் என்னும் ஸ்தாபனத்தை நிறுவி 22 பேருடன் சீனாவிற்கு திரும்பினார்.
பல போராட்டங்கள் தொடர்ந்தன. அவரது மகள் மரித்தாள், மனைவி குழந்தைப் பேற்றின் போது இறந்தார். அவருடைய பலவீனங்கள் எவ்வளவாயினும் இவையெல்லாம் ஊழியத்திற்கு தடையாக இருந்ததேயில்லை. மாறாக ஊழியம் விருத்தியடைந்து விஸ்தாரமடைந்தது. 1995-ல் 641 மிஷெனெரிகளும், 462 சீன உதவியாளர்களும் இருந்தனர். கம்யூனிச ஆட்சியில் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டே சென்றது, சீனர்கள் இரட்சிக்கப்பட்டு அத்தேசத்தில் பலுகிப் பெருகினர். அப்போஸ்தலர்களாகிய பவுலுக்கு பின் பரந்த நிலப்பரப்பை நடந்து, சுவிசேஷத்தோடு சென்றவர் இந்த ஹட்சன் டெய்லரே! பில்லிகிரஹாம், ஏமி கார்மைக்கேல், ஒலிம்பிக் வீரர் எரிக் லிடில், 20ம் நூற்றாண்டு இரத்த சாட்சி ஜிம் எலியட், ஆட்ரி, லூயி போன்ற பலர் இவர் வாழ்க்கையால் தொடப்பட்டு இறைவனின் பணிக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.
வேதத்தில் பார்க்கும்போது, மோசே, வழிநடத்தி வந்த இலட்சக்கணக்கான ஜனங்களை மோசேக்குப் பின்பு வழிநடத்த ஆண்டவர் யோசுவாவை எழுப்பினார். அதுபோல இன்று அவரது பணிக்கு ஆயிரக்கணக்கான யோசுவாக்கள் தேவை.
தேசத்தின் எழுப்புதலுக்காக நாம் பிரயாசப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். நாம் ஊழியம் செய்தால் மட்டும் எழுப்புதல் வராது. ஊழியம் செய்யும் அநேக யோசுவாக்களை எழுப்ப வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு நாங்கள் கிராம மிஷனெரி இயக்க குழுவினராக அடுத்த தலைமுறை யோசுவாக்களை எழுப்ப பிரயாசப்பட்டு வருகிறோம். மாதந்தோறும் வாலிபர்களுக்காக முகாம்கள், தலைமைத்துவ முகாம்கள் நடத்தி, எங்களால் இயன்றதைச் செய்து வருகிறோம். எங்களுக்காக ஜெபியுங்கள். உங்கள் பிள்ளை யோசுவாக்களாக எழும்ப அர்ப்பணியுங்கள்.
நினைவிற்கு: மோசேயோடு கூட நடந்த யோசுவாவைத்தான் கர்த்தர் பயன்படுத்தினார். உங்களோடு நடக்கிறவர்கள் யோசுவாவாக இருக்கலாம், அவர்களுக்கு நீங்கள் மோசேயாக இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- P. .சிவா
ஜெபக்குறிப்பு:
மாதத்தில் 30 நாட்களும் 30 வீடுகளில் நாம் பணித்தளங்களில் வீட்டு ஜெபக்குழுக்கள் கிரமமாக நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864