By Village Missionary Movement
Wednesday, 28-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 28-12-2022 (Christmas Special)
எதைத் தெரிந்தெடுக்கலாம்?
‘’…நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.’’ - மத்தேயு 6:34
அரசன் ஒருவர் தான் இறந்த பின்பு தன்னை புதைக்கும் இடம் கூட பிரம்மாண்டமாய் இருக்க வேண்டுமென்று விரும்பினார். அதற்காக மிகச்சிறந்த கட்டடக்கலை வல்லுநர்களைக் கொண்டு சிற்பக்கலையுடன் மிக அழகிய கல்லறை ஒன்றைக் கட்டினார். அதன் அழகையும், பிரம்மாண்டத்தையும் கண்டு பூரித்துப் போனார். ஓரிரு வாரங்கள் உருண்டோடின. இப்பொழுது அதை காணும் போதெல்லாம் தான் ஒருநாள் மரித்து இந்த இடத்தில் தான் புதைக்கப்படுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டு, எப்போதும் இறப்பைப் பற்றியே சிந்தித்து தூக்கத்தை இழந்தார். இதைக் கண்ட அமைச்சர், “அரசே நாளை என்ன நிகழும்? என எண்ணி கவலைப்படுவதை விட இன்று நாம் வாழும் வாழ்வை இனிமையாக கழிப்பதே புத்திசாலித்தனம். என்றைக்கோ ஒரு நாள் புதைக்கப்படப்போவதை எண்ணி இன்றைக்கு அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியை புதைத்து விட்டீர்களே” என்றார்.
நம்மில் அநேகரும் கூட நாளைய தின கவலையை எண்ணி, இன்றைக்கு மகிழ்ச்சியாய் இருக்க மறந்து விடுகிறோம். மனிதர்களாகிய நாம் இப்படிப்பட்ட சுபாவத்தோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிற நம் அருள்நாதர் இயேசு கிறிஸ்து தமது மலைப்பிரசங்கத்திலே நாளைக்காக கவலைப்பட வேண்டாம் என்று 10 வசனங்கள் மூலம் தெளிவாக கூறியுள்ளார் (மத்தேயு 6:25-34) இதை எத்தனையோ முறை வாசித்திருக்கிறோம். கிளிப்பிள்ளையைப்போல மனப்பாடமாகவும் சொல்லி விடுவோம். ஆனாலும் நாம் ஏதாவது ஒரு காரியத்தை தேடிக்கண்டுபிடித்து அதற்காகக் கவலைப்படுகிறோம். கவலைப்படுவதென்பது நமது இயற்கை
சுபாவமாகிவிட்டது.
‘’இன்னும் நான் சொந்த வீடு கட்டவில்லையே’’ என்று கவலைப்பட்டு வாடகை வீட்டில் வசிக்கும்போது அன்றாடம் நிகழும் சிறு சிறு சந்தோஷ நிகழ்வுகளை அனுபவிப்பதில்லை ‘’இன்னும் மூன்று ஆண்டுகளில் என் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும்’’ என்ற கவலையில், மகள் தங்களோடு இருக்கும் நாட்களில் அவளோடு நேரம் செலவிட்டு, ஐக்கியம் கொண்டு, நண்பர்களைப் போல பழகும் மகிழ்ச்சியான தருணங்களை இழந்து விடுகிறோம். கவலைப்படுவதினால் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பதை நன்கறிவோம். பின் ஏன் வீண் கவலை?
அன்பானவர்களே! காக்கை, குருவிகளுக்குக் கூட வேளா வேளைக்கு உணவளிக்கும் கர்த்தர், அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்களாகிய உங்களை கவனிக்காமல் விட்டுவிடுவாரோ? இல்லவே இல்லை. ஆகவே வரும் வருடத்தைக் குறித்த காரியங்களை, பாரங்களை கர்த்தர் மேல் வைத்துவிட்டு இன்றைக்கு தேவன் நாம் அனுபவிக்கும்படி கொடுத்துள்ளவற்றில் மகிழ்ச்சியாயிருப்போம்.
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:
நம்முடைய வளாகத்தில் தங்கி ஊழியப் பயிற்சி பெறும் வடமாநில பயிற்சி ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864