By Village Missionary Movement
Tuesday, 20-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 20-12-2022 (Christmas Special)
மறப்பதில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
“...தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல்,…” – 2 கொரி. 5:19
ரஷ்யாவில் கம்யூனிசவாதிகள் கிறிஸ்தவர்களை துன்புறுத்திய காலங்களில், ஹாரிடென்பூம் என்ற பெண்மணியும் சிறைப்படுத்தப்பட்டு அதிகமாய் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். பின் அநேக வருடங்களுக்குப் பின்பு விடுதலையாகி கிறிஸ்துவை பிரசங்கித்து வந்தார்கள். இவ்வாறு ஒருநாள் ஒரு அரங்கத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரைக் கண்டு அதிர்ந்து போனார்கள். காரணம் அவர்தான் சிறையில் அவர்களை கொடுமைப்படுத்தி அவரது சொந்த சகோதரியையும் கொன்ற சிறை அதிகாரி! அன்று கூட்டம் முடிந்து அனைவரிடமும் கைகுலுக்கும்போது, அவரும் வந்து கை குலுக்குவதற்கு கை நீட்டினார். அவருக்கு ஹாரியை தெரியவில்லை என்றாலும் ஹாரிடென்பூவால் தனது கையை நீட்ட முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. “இயேசப்பா உமது அன்பின் ஆவியை என் இருதயத்தில் ஊற்றுங்க” என்று ஜெபித்து புன்சிரிப்புடன் அவரது கைகளையும் குலுக்கினார்.
வேதத்திலே, தன்னுடைய சகோதரர்கள் செய்த துரோகத்தை மனதார மன்னித்து மறந்த யோசேப்பைக் குறித்து வாசிக்கிறோம். ஆண்டவர் அவருக்கு கொடுத்த முதல் மகனுக்கு பெயரிடும்போது என் வருத்தம் யாவையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார். (ஆதி.41:51) என்று கூறி மானாசே என்று பெயரிட்டார். ஆம், மன்னித்து மறக்கும்போது மட்டுமே மெய்யான மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் உண்டு. இயேசுகிறிஸ்து சொன்ன உவமையிலே தகப்பனை விட்டு பிரிந்து போன இளையகுமாரனை தகப்பன் மீண்டும் ஏற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம். அவனது கடுஞ்சொற்கள், கீழ்ப்படியாமை அனைத்தையும் மன்னித்து மறந்து மீண்டும் அன்பு செலுத்தினார்.
பிரியமான தேவ பிள்ளைகளே! இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் நமது பரம தகப்பனின் இருதயம் நமக்கு இருக்கிறதா? நமது வாழ்வில் நடந்த காரியங்கள் நம்மை காயப்படுத்தக்கூடியதாய், நியாயமற்றதாய் இருந்தாலும் மாற்கு 11:25ல் பரம பிதா சொன்னபடி மற்றவர்கள் தப்பிதங்களை மறந்து பிதாவோடு ஐக்கியம் கொண்டு நமது வாழ்வை இனிமையாக்கிக் கொள்கிறோமா? நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கிறோமா? அப்போது இயேசுகிறிஸ்துவின் அன்பு நம் இருதயங்களில் ஊற்றப்பட்டு எல்லா கசப்புகளையும் மறந்து ஒவ்வொரு நாட்களையும் பண்டிகை சந்தோஷத்துடன் கொண்டாட முடியும்.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
மோட்சப்பயணம் தின தியான இதழ் அநேகருடைய ஆவிக்குரிய தரத்தை உயர்த்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864