By Village Missionary Movement
Tuesday, 13-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 14-12-2022 (Christmas Special)
தம்பதிகளுக்குள் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
“…தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே…’’ - மத்தேயு1:20
உலகம் கண்ட முதல் கிறிஸ்துமஸ் அது. அந்த மாட்டு கொட்டகைக்குள் மரியாள்-யோசேப்பு தம்பதியினர், இயேசு பாலகனை கையில் ஏந்தி ஆனந்த பாக்கியம் அடைந்தவர்களாக மகிழ்ந்திருந்தனர். யோசேப்பால் எப்படி மரியாளை கனிவுடன் கவனித்து குறைவிலும் நிறைவான மகிழ்ச்சியோடு இருக்க முடிந்தது என்று கொஞ்சம் Rewind பண்ணிப் பார்ப்போமா? புதிய ஏற்பாட்டில் முதல் நீதிமானாய் அறிமுகப்படுத்தப்படுபவர் யோசேப்புதான்! இவ்வளவு பெரிய நற்சான்றிதழைப் பெற காரணமென்ன? யோசேப்பு மரியாளை அவமானப்படுத்த விரும்பாததுதான். Wow எத்தனை சிறப்பான நற்குணம்! எத்தனை குடும்பங்களில் வாழ்க்கைத் துணையிடம் காணப்படும் குறைகளை பிறந்த வீடு, புகுந்த வீடு, நண்பர்கள் வட்டாரம் என தூற்றி அவமானப்படுத்துகின்றனர். ஆனால் யோசேப்போ சொப்பனத்தில் கிடைத்த தேவதூதனின் ஆலோசனைப்படி மரியாளைத் தள்ளிவிட நினைத்த எண்ணத்தைத் தள்ளி வைத்துவிட்டு, அவளைச் சேர்த்துக் கொள்ளுகிறார். சுயநலமற்ற சிந்தை!
மரியாளும் இத்தனை பெரிய அவமானத்தை சுமக்க தன்னை ஒப்புக்கொடுத்தாள். திருமணமாகாத ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது யூத சட்டப்படி உயிருக்கே உலை வைப்பது போன்றது. கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். மரியாள் தன் திருமண வாழ்வையோ, தன் உயிரையோ ஒரு பொருட்டாக எண்ணாமல் தேவ சித்தம் செய்ய சுயநலமின்றி செயல்பட்டாள். ஆம், ஒருவருக்குள் கிறிஸ்து உருவாகாவிட்டால், அவர்கள் தன்னுடைய அவமானம், நிந்தை இவைகளையும் தாண்டி பிறருக்கு ஆசீர்வாதமாகி விடுவார்கள்.
பிரியமானவர்களே! யாரெல்லாம் தங்கள் விருப்பத்தை தூர தள்ளிவிட்டு, சுயத்திற்கு மரித்து, தேவசித்தத்தை செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் தினம் தினம் கிறிஸ்துமஸ்தான். எந்தவொரு குடும்பங்களிலுள்ள தம்பதிகள் கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் வீட்டில் தினமும் கிறிஸ்துமஸின் மகிழ்ச்சி உண்டு என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கைத் துணையின் சின்னச் சின்ன குறைகளை ஏற்றுக்கொள்ளாமல், நான் சொல்வதுதான் சரி என்று சண்டை, வாக்குவாதம், கசப்போடு வாழும் குடும்பங்களில் கிறிஸ்து இன்னும் உருவாகவில்லை என்பதே பொருள். அவர்களது சுயம் சாகடிக்கப்படவில்லை என்பதே அர்த்தம். யோசேப்பும், மரியாளும் தங்களது விருப்பத்தை தூர எறிந்து விட்டு, தங்களது விருப்பத்திற்கு மரித்து, தேவ சித்தம் செய்ய அர்ப்பணித்த போது அவர்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாய் மாறினது மாத்திரமல்ல, முழு உலகிற்கும் ஆசீர்வாதமுமானார்கள். நாமும் தேவசித்தம் நம் குடும்பத்தில் நிறைவேற அர்ப்பணிப்போம். கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்துகிறவர்களாய் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸைக் கொண்டாடுவோம்.
- Mrs. எபன் சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
டியூசன் சென்டர் மூலம் சந்திக்கப்படும் சிறுவர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250