By Village Missionary Movement
Thursday, 08-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 09-12-2022 (Christmas Special)
சொந்த சகோதரர்களுக்குள் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
“…தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்.” - 1யோ.4.20
ஆதியாகமத்திலுள்ள இரு வேறு சகோதரர்களைக் குறித்து இன்று காண்போம். ஒன்று ஏசா-யாக்கோபு! தன்னை ஏமாற்றி ஆசீர்வாதங்களையெல்லாம் பறித்துக்கொன்ட யாக்கோபை வரவேற்க வருகிறார் ஏசா. யாக்கோபின் உள்ளத்தில் தன் சகோதரனைக் குறித்து இருந்த பயத்தினால் வெகுமானங்களை முன்பாக அனுப்புகிறான்(ஆதி. 31) ஆனால் ஏசாவோ பழைய ஏமாற்றங்களையெல்லாம் மன்னித்ததினால் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறான். வெகுமானங்கள் பெற்றுகொள்ளும்படி யாக்கோபு வற்புறுத்தியபோதும் ஏசா, “என் சகோதரனே எனக்குப் போதுமானது உண்டு” என்று கூறுகிறார். ஆம், நாம் நம் உடன்பிறந்த சகோதர சகோதரிகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்போது தேவனும் நம்முடைய குறைவுகளை மன்னித்து ஏற்றுக்கொண்டு நம்மை ஆசீர்வதிக்கிறார்.
இரண்டாவதாக, காயீன்-ஆபேல். தேவன் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்ததினிமித்தம் காயீனின் உள்ளத்தில் பொறாமையும் எரிச்சலும் வந்தது. ஆபேலின் ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாததால் ஆபேலைக் கொன்று போட்டான். அதுமட்டுமின்றி தேவனிடமிருந்து சாபத்தையும் பெற்றுக்கொண்டான். பாருங்கள்! ஏமாற்றிய யாக்கோபையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் சகோதரன். மறுபுறம் ஒன்றுமறியா சகோதரனை கொலை செய்ய துணிந்த காயீன்.
உலகத்தைப் பார்த்தோமென்றால், சகோதரர்களுக்குள்ளே கோபம், பொறாமை, வஞ்சகம், வெறுப்பு, எரிச்சல், பகை அதிகரித்துக்கொண்டே வருகிறதை நடக்கும் சம்பவங்கள் மூலம் அறிகிறோம். அழியக்கூடிய, நிலையில்லாத காரியங்களுக்காக நீதிமன்றத்தை நாடும் நிலை உள்ளது. ஒருவர் குறைகளை மற்றவர் மன்னிக்கமுடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம். அன்று காயீன் ஒரு கல்லால் ஆபேலைக் கொண்று போட்டான். இன்று நாம் ஒரு சொல்லால் அதை செய்து விடுகிறோம். சகோதரர்களுக்குள் சமாதானமின்றி சண்டைபோட்டிருந்தோமானால் அவர் நம் காணிக்கையைக் கூட அங்கீகரிக்கமாட்டார். முன்புபோய் உன் சகோதரனிடத்தில் ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து என்று கூறுகிறார். அப்படியென்றால் நாம் கேட்கலாம், “என் பக்கம் தவறேயில்லையே, அவன்தான் அநியாயமாய் பேசினான். அவன் வந்து மன்னிப்பு கேட்கட்டும், நான் மன்னிக்கிறேன்” என்று! இப்படி “யார் முதலில்” என்ற கேள்வி வரும்போது ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். இரண்டு பேரில் யார் அதிக ஆவிக்குரியவர்களோ அவர்களே முதலில் சமாதானத்திற்காக முயற்சியில் இறங்க வேண்டும்.
ஆம், இந்த கிறிஸ்துமஸ் காலம் சமாதானத்திற்கான வாசலண்டை நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ள காலம். ஆகவே இதற்கு தேவையான பெரிய கிருபையை தேவனிடத்தில் பெற்று தாமதமின்றி செயல்படுவோம். கடனுக்காக Forwarded massage ஐ அனுப்பாமல் நேரில் சென்று அன்பை பகிர்ந்துகொள்வோம். இந்த கிறிஸ்துமஸ் காலம் நம் குடும்பத்தில் அர்த்தமுள்ள கிறிஸ்தவர்களாய் நாம் வாழ உதவி புரியட்டும்.
- Mrs.-ஐடா கிங்க் டேவிட்
ஜெபக்குறிப்பு:
வீட்டு ஜெபக்குழுக்கள் நடத்த வீடுகளை திறந்து கொடுக்கும் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250