By Village Missionary Movement
Monday, 21-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 22-11-2022
நோக்கிக் கூப்பிடு
“ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” - சங்கீதம் 50:15
கேலோவேய் என்பவர் பூட்டிய ஆலயத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அந்தப் பெரிய ஆலயத்தில் ஒரு சிறிய இடைவெளி வழியாக ஒரு பறவை உள்ளே வந்தது. ஆலயத்தின் குறுக்கும் நெடுக்குமாக பறந்து திரிந்து பின்னர் சற்று நேரம் கழித்து, அது வெளியே போக முயற்சித்தது. அதற்காக அது சுற்றிலும் பறந்து வெளியே போகும் வழியைத் தேடியது. சற்று தாழ்வாக வந்தபோது அவர் அதைப் பிடிக்க முயற்சித்தார். ஆனால் அது மீண்டும் உயரே எழும்பி பறக்க ஆரம்பித்தது. அவர் அந்தப் பறவை பறந்த இடத்திற்கெல்லாம், கூடவே சென்றார். ஆனால் அந்தப் பறவை அவர் கைகளில் சிக்காமல், வெளியே போக வழியைத் தேடிக் கொண்டிருந்தது. அவர் ஒரு ஜன்னலை திறந்தும் அதற்கு தெரியவில்லை. கடைசியில் ஒரு கண்ணாடி ஜன்னலில், இதுதான் வெளியே போகும் வழி என்று நினைத்து, அங்கு போய் மேலே வேகமாக மோதிய போது அடிபட்டு கீழே விழுந்தது. அப்போது அதை கையில் எடுத்த கேலோவேய் நீ மட்டும் என்னை அனுமதித்திருந்தால் நான் எப்போதோ உன்னை விடுவித்திருப்பேன். ஆனால் நீயோ என் கையில் வராமல், உன் இஷ்டத்திற்கு பறந்து சென்றாய். கடைசியில் இதோ அடிபட்டு கீழே விழுந்துவிட்டாய் எனக் கூறி ஜன்னலைத் திறந்து அதை வெளியே விட்டார். அது தன் செட்டைகளை அடித்து விடுதலையோடு பறந்தது சென்றது.
தாவீது பெலிஸ்தனைக் கொன்ற அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். சவுல் தாவீதை ஈட்டியினால் கொன்று போட நினைக்கிறான். ஆனாலும் சவுலின் கைக்கு தேவன் தாவீதை தப்புவித்தார். இதுபோன்றதான பல விதங்களில் தாவீதைக் கொலை செய்ய வேண்டுமென சவுல் நினைத்தபோதெல்லாம் கர்த்தர் தாவீது தப்பிக்கொள்ளும் வழியையும் வைத்திருந்தார். தாவீது தன்னுடைய வாழ்க்கையில் ஆபத்து நேரிடுகிற சமயத்தில் எல்லாம் தேவனை நோக்கிக் கூப்பிடுவதையும், தேவன் தாவீதை விடுவிப்பதையும் நாம் அறிவோம்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நம்முடைய ஆபத்தில் நமக்கு உதவி செய்த வல்லவர் ஒருவர் உண்டு. அவர்தான் இயேசு. ஆனால் நாம் சில நேரங்களில் நம்முடைய ஆபத்தான சூழ்நிலைகளில் நமக்கு உதவி செய்யும் தேவனை மறந்துவிடுகிறோம். நமக்கு நேரிடுகிற ஆபத்து, தேவையில்லாத சில பயங்களாக இருக்கலாம், சில சூழ்நிலைகளாக இருக்கலாம், பெலவீனங்களாகவும் இருக்கக்கூடும். இல்லை என்றால் சில மனிதர்களுடைய வார்த்தையாகவும் இருக்கலாம். இப்படிப்பட்டதான ஆபத்தான சூழ்நிலையில் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது நிச்சயம் அவர் நம்மை விடுவிப்பார்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் தேவகரம் உடனிருந்து நடத்த, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250