By Village Missionary Movement
Friday, 18-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 19-11-2022
படகு போகுது
‘’மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?’’ – மத்தேயு 16:26
எல்லாம் கற்றறிந்த ஞானி ஒருவர் ஒரு முறை ஆற்றை கடந்து செல்ல வேண்டியதாயிருந்தது. பிரயாண நேரத்தில் பரிசல்காரனிடம் பேச்சுக்கொடுத்தார். தன்னுடைய ஞானத்தை அவன் அறிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணி அவனிடம் தத்துவங்கள், சாஸ்திரங்கள் பற்றி தெரியுமா? என்றார். பரிசல்காரன் இல்லை என்றான். அடடா உன் பாதி வாழ்வை இழந்து விட்டாய் என்றார். சிறிது நேரம் கழித்து, விஞ்ஞானம், மெய்ஞானம் பற்றி தெரியுமா? என்றார். இல்லை என்று அவன் தலையசைக்கவே உன் முக்கால்வாசி வாழ்க்கையை இழந்து விட்டாய் என்றார். ஞானி இப்படி பேசிக்கொண்டிருக்கையில், பரிசலில் உள்ள சிறிய இடைவெளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வர ஆரம்பித்தது. "ஐயா, பரிசல் கொஞ்ச நேரத்தில் மூழ்கப்போகிறது. உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்றான். ஞானி இல்லை என்று பதறவே, "ஐயா, நீங்கள் எல்லாம் கற்றும், வாழ்க்கைக்குத் தேவையானதைக் கற்றுக் கொள்ளாமல் போய்விட்டீர்களே! இப்போது உங்கள் முழுவாழ்வையும் இழக்கப்போகிறீர்களே என்னை மன்னியுங்கள். ஐயா, எனக்கு நீச்சல் தெரியும். என் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறேன்." என்று ஆற்றில் குதித்தான்.
ஆம், இதுபோலத்தான் வேதத்திலே சாலொமோன் ராஜா சகலமும் அறிந்த ஞானி, அவருக்கு முன்னும் பின்னும் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே வேதம் சொல்கிறது. வானத்தின் கீழ் நடப்பதையெல்லாம் ஆராய மனதை செலுத்தினார். ஆனால் தன் வாழ்வைக் குறித்த கவனம் இல்லாமல் அவர் வாழ்வு இருளில் முடிவடைந்ததைப் பார்க்கிறோம். வேதத்திற்குப் புறம்பாக 1000 மனைவிகள் மறுமனையாட்டிகள். அவர்களை மகிழ்விக்க விக்கிரக ஆராதனைக்கென்று கோயில்களைக் கட்டவும் துணிவு கொள்கிறார். கடைசியில் மாயை மாயை எல்லாம் மாயை என்று முடிக்கிறார். ஆனால் அவரது தகப்பன் தாவீதோ உலக ஆசீர்வாதங்களில் , ராஜ பதவியில் திளைத்து வழி மாறாமல் உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி, உம்முடைய கற்பனையின்படி நடப்பதே மகா விஸ்தாரம், உம்முடைய ஞானமே பெரியது என திரும்பத் திரும்ப கூறுவதைக் காணமுடியும். ஆம், இறுதி வரை அவர் தேவனைப் பிடித்துக்கொண்டார்.
எனக்கான்பானவர்களே! உலகத்தின் பெயர் புகழுக்காக பட்டப் படிப்பிற்காக இரவும் பகலும் ஓடிக்கொண்டிருக்கிறீர்களோ? இவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு தேவனுக்குரிய காரியங்களை அலட்சியப்படுத்துகிறீர்களோ? சிந்தியுங்கள். உங்கள் ஆத்துமாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எத்தனை சதவீதம் என யோசியுங்கள். இம்மைக்காக வாழும் வாழ்க்கையின் முடிவில் சலிப்பும், நோவுமே நிறைந்திருக்கும். ஆனால் தேவனுக்கு முதலிடம் கொடுக்கும் வாழ்க்கை, தேவனுக்காக வாழும் வாழ்க்கை தருவதோ மனமகிழ்ச்சி, ஜீவன், நித்திய வாழ்வு! ஆம், வாழ்க்கை என்னும் படகு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். நாம் தேவனோடிருந்தால் அவர் நம்மை நித்திய ஜீவக்கரையில் பத்திரமாய் கொண்டுபோய் சேர்ப்பார்.
- Mrs. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் சந்திக்கப்படுகிற மக்கள் இயேசுவைக் கண்டுகொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250