By Village Missionary Movement
Saturday, 12-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 12-11-2022
சாபம்
‘’துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.’’ - நீதிமொழிகள் 3:33
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் வயதான கிறிஸ்தவ தாயார் ஊழியக்காரர் ஒருவரை ஜெபம் செய்ய அழைத்தார். மாலை 7மணி அளவில் அந்த ஊழியர் ஜெபம் செய்ய சென்றார். அந்த தாயார் வீட்டு வாசலிலே பெரிய sweet stall இருந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த அறையின் கட்டிலில் 4 முனைகளிலும் கயிறு கட்டப்பட்டு ஒரு வாலிபத் தம்பியைக் கண்டார். முகம் முழுவதும் தாடியோடு, அரைகுரை ஆடையோடு, பைத்தியம் போல காணப்பட்டான். பின்னர் அடுத்த அறையின் கதவைத் திறந்தார். அங்கு மூளை வளர்ச்சியற்ற ஒரு வாலிபப் பெண்ணைக் கண்டார். அந்தத் தாயார் கண்ணீரோடு, ‘’எங்களுக்கோ 60 வயதைத் தாண்டி விட்டது. எங்களுக்கு பின் யார் இந்த பிள்ளைகளை பார்ப்பார்கள். எங்களுக்குப் பெரிய வீடு, கடை, சொத்து, வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கிறது. ஆனாலும் சந்தோஷமும், நிம்மதியுமில்லை. யார் செய்த பாவமோ, சாபமோ தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் நரக வாழ்க்கை வாழ்கிறோம்’’ என்றார். ‘’நீங்கள் எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள்’’ என்றார்கள். அந்த ஊழியரும் ஜெபித்து வந்தார். பின்னர் மூத்த ஊழியரோடு நடந்த காரியங்களை சொன்னபோது, அவர்கள் தம்பி இது ‘’சாபம்’’ என்றார்கள்.
சாபம் என்றால் என்ன? சாபம் என்பது ‘’மன்னிக்கப்படாத பாவம்’’ மற்றும் ‘’தேவ கோபம்”. அதாவது நாம் செய்த பாவத்திற்கு உயிரோடு இருக்கும்போது மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படியில்லையென்றால் அது அவருடைய சந்ததி மேல் ‘’சாபமாக’’ வரும். வேதத்தில் யாத்திராகமம் 34:7 ல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்று மோசே மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு சொல்லப்பட்டது. உபாகமம்11:26 ல் வசனம் சொல்லுகிறது. ‘’இதோ இன்று உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் வைக்கிறேன்’’ நாம் எதை தெரிந்தெடுக்கப் போகின்றோம்? நாம் ஒரு வேளை துணிகர பாவத்தில் துன்மார்க்கமாய் வாழும் போது சாபம் நம் வீட்டைப் பிடிக்கிறது. நாம் நம்முடைய சந்ததிக்கு சொத்தை சேர்த்து வைக்கின்றோமோ இல்லையோ, சாபத்தை சேர்த்து வைத்துவிடக் கூடாது. அன்பானவர்களே! நம் வாழ்க்கையிலுள்ள சாபங்களை மாற்றத்தான் இயேசுகிறிஸ்து சாபத்தின் சின்னமாகிய சிலுவையில் பலியானார். அவருடைய சிரசின் மீது முட்கிரீடம் வைக்கப்பட்டது. அந்த முள் சாபத்தைக் குறிக்கிறது. ஒரு வேளை நம் குடும்பத்திலும் சாபம் இருக்குமானால் நாம் ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டு அவருடைய இரத்தத்தால் கழுவப்படும்போது, அந்த சாபம் முறிக்கப்படும். எந்த வித சாபக்கட்டாயிருந்தாலும் ஆண்டவர் உங்களை விடுவிப்பார். அவருடைய சிலுவையை நோக்கிப் பாருங்கள். நிச்சயம் விடுதலையுண்டு.
- Bro. பர்னபாஸ்
ஜெபக்குறிப்பு:
‘’கண்மணிப்பிள்ளை இயேசுவுக்காக ஜெபத்திட்டம்’’ இத்திட்டத்தில் இணைந்துள்ள பிள்ளைகளின் எதிர்காலம் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250