By Village Missionary Movement
Wednesday, 17-Feb-2021இன்றைய தியானம்(Tamil) 17-02-2021
சாம்பல் புதன்
“...சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.” – அப். 21:26
இன்று சாம்பல் புதன். முழு உலகத்திலும் எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் இந்த நாளை விசேஷித்த விதமாக ஆசரிப்பதுண்டு. இது எப்படி நமது சபைகளில் விசேஷித்த நாளாக உருவெடுத்தது என்று பார்ப்போம்.
முதன் முதலில் கி.பி.360ஆம் ஆண்டில் சாம்பல் புதன் கிறிஸ்தவ சபைகளில் ஆசரிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பின்பு ஐந்தாம் நூற்றாண்டில் போப் கிரிகோரியன் என்பவர் மூலமாக கத்தோலிக்க சபைகளில் சாம்பல் புதன் என்பது கிரமமாக வருடந்தோறும் ஒழுங்கு செய்யப்பட்ட திருநாளாக மாற்றப்பட்டது. முதலில் இது 40 மணி நேரமும் பின்பு ஆறுநாட்களாகவும் தொடர்ந்து 21 நாட்கள் ஆகவும் அனுசரிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் சாம்பல் புதன் தொடங்கி நாற்பது நாட்கள் வரைக்கும் உபவாசமும், சரீர ஒடுக்குதலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவே லெந்து காலம் என்று அழைக்கப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்தப்படுகின்ற குருத்தோலைகளை பத்திரமாக வைத்திருந்து அடுத்த வருடத்தில் அதை எரித்து சிலுவையின் நினைவாக அந்த சாம்பலை நெற்றியில் பூசும் ஒரு சடங்காச்சாரமும் குறிப்பிட்ட சபைப் பிரிவில் உண்டு.
மேலே வாசித்த செய்தியை வேதாகம கண்ணோட்டத்தில் இருந்து நாம் பார்த்தால், “மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப் போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?” என்று ஏசாயா 58:5ல் வாசிக்கிறோம். நமது ஆண்டவர் உபவாசத்தைக் குறித்தும் சரீர ஒடுக்குதலைக் குறித்தும் வேதாகமத்தில் பல இடங்களில் தெளிவாக நமக்கு சொல்லி இருக்கின்றார். காலம் காலமாக திருச்சபைகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் இது வெளிப்பகுதியில் நின்றுவிடாதபடி உள்ளான மனிதனிலும் நல்ல மாற்றங்களோடு செயல்படுத்தப்பட வேண்டும். வெறுமனே சாம்பலிலும் மண்ணிலும் நமது பக்தியை காண்பிப்பது சரியல்ல. நம் இருதயத்தில் உண்டாகும் மாற்றமே நம் தேவன் எதிர்பார்க்கிற காரியம்.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! மேலும் ஒரு வசனத்தோடு இன்றைய செய்தியை நிறைவு செய்ய விரும்புகிறேன். “புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” என்று வாசிக்கின்றோம் (ரோமர் 2: 28, 29). ஆம், இதைத்தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். மார்க்க ரீதியான வெளிப்புறத்தில் செய்யப்படும் ஆச்சாரங்களை கண்டு தேவன் ஏமாறுகிறவர் அல்ல. நாம் இதை உணர்ந்தவர்களாக நம்முடைய பிதாவாகிய தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள எப்பொழுதும் ஆயத்தமாய் இருப்போம்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
பசித்தோர்க்கு உணவளிக்கும் திட்டம் மூலம் பயன்பெறும் நபர்கள் பரலோக பிரஜைகளாக மாற ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250