By Village Missionary Movement
Sunday, 06-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 07-11-2022 (Youth Special)
செட்டையின் நிழல்
“அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.” - சங் 91:4
ஒரு வீட்டுத் தோட்டத்தில் குட்டிக் குட்டி கோழிக்குஞ்சுகள் தரையைக் கிளறி பூச்சி புழுக்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று தாய்க்கோழி ஒரு வித ஒலி எழுப்பவே கோழிக்குஞ்சுகள் வேகமாக வந்து அதன் செட்டைக்குள் பதுங்கிக் கொண்டன. இதை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர், காரணம் அறிய சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போதுதான் தெரிந்தது வானத்தில் ஒரு பருந்து கோழிக்குஞ்சுகளை தூக்க வட்டமிட்டு கொண்டிருப்பதைக் கண்டார். தாய்க்கோழியின் பாசத்தையும் பரிவையும் கண்டு வியந்து போனார்.
அன்பான வாலிபத் தங்கைகளே! நாமும் பாதுகாப்பில்லாத உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதிரியான பிசாசானவன் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித் திரிகிறான். சாத்தானின் தந்திரங்கள், பாவப் போராட்டங்கள், சோதனைகள் இவை எல்லாவற்றிலுமிருந்து தப்பித்துச் செல்ல நமக்கு இருக்கக் கூடிய ஒரே பாதுகாப்பான இடம் தேவனுடைய செட்டையின் நிழல் தான். சத்துருவின் சகல தந்திரங்களுக்கும் தப்பி நாம் அடைக்கலம் புகக்கூடிய இடம் அவர் சமூகம் மாத்திரமே! இந்தப் பொல்லாத உலகின் பாவங்களுக்குத் தப்ப வேண்டுமானால் அவருடைய பிரசன்னத்திற்குள் வந்து விட வேண்டும். தீய நண்பர்களின் ஆலோசனைகளுக்கு தப்பிக்கொள்ள அவரது வேத வசனமே நம் பாதுகாப்பு! தேவனும், அவருடைய வார்த்தையும் நம்மோடு இல்லையென்றால் அது பாதுகாப்பற்ற வாழ்க்கை!
இதை நன்கு உணர்ந்திருந்த சங்கீதக்காரன் 91ம் சங்கீதத்தில் ஆண்டவரால் வரும் பாதுகாப்பை வியந்து, மகிழ்ந்து எழுதுகின்றார். உன்னதமானவரின் மறைவு, சர்வவல்லவரின் நிழல், அவரது சிறகுகள், அவரது செட்டை, அவரே தாபரம், தூதர்களுக்குக் கட்டளை, உயர்ந்த அடைக்கலம் என்று தேவன் நம்மை பாதுகாக்கும் வழிகளை அறிந்து அனுபவித்து எழுதுகிறார். ஆம் கண்மணிப் பிள்ளைகளே! தேவன் தருவது நம் சரீரப்பிரகாரமான பாதுகாப்பு மட்டுமல்ல, நம் ஆவிக்குரிய மனிதனின், கறைபடாத வாழ்வு, பாதுகாப்பு வளர்ச்சி எல்லாமே அவரில் அடங்கியிருக்கிறது. ஆகவே இந்தப் பாவ உலகில் அவரது செட்டைக்குள் வந்து அடைக்கலம் புகுந்துகொள்ளுங்கள், பாதுகாப்பை அனுபவியுங்கள்.
- Mrs. திவ்யா பெர்னார்ட்
ஜெபக்குறிப்பு:
வாலிபர் மாலை நிகழ்ச்சிகளில் செய்தி கொடுக்கும் தேவ தாசர்களை தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250