By Village Missionary Movement
Thursday, 03-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 04-11-2022
காத்திரு
“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்படிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை” - ஆபகூக் 2:3
பாவத்திலிருந்து விடுதலை பெற்று வட இந்தியாவில் ஆதிவாசி மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்து தன் குடும்பத்தை விட்டு ஒருவர் மிஷனெரியாக அங்கு சென்றார். ஐந்து வருடங்கள் ஆகியும் காது கேளாத ஒரு வயதான தாயாரைத் தவிர அவரது ஊழியத்தில் ஆத்துமாக்கள் வரவே இல்லை. ஒருநாள் சோர்ந்துபோய் இனி ஒன்றுமே வேண்டாம் என்று தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு திரும்பலாம் என்று முடிவெடுத்தார். திடீரென்று ஒரு நாள் அந்தத் தாயார் மரித்துப் போனார்கள் என்ற செய்தி வருகிறது. ஏற்கெனவே இவர்கள் தன் குடும்பத்தினரிடம் தன்னை கிறிஸ்தவ முறைப்படி தான் அடக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் மிஷனெரியை அழைத்தனர். இவரும் அங்கு சென்று கண்ணீரோடு நின்றார். ஆண்டவர் செயல்பட ஆரம்பித்தார். இவர் பிரார்த்தனை செய்யத் துவங்கியவுடன் அந்தத் தாயாரை தேவன் உயிரோடு எழுப்பினார். அதைக் கண்ட அந்த கிராமமே இரட்சிப்புக்குள் வந்தது. அந்த ஊழியர் முடிந்தது என்று நினைத்த காரியத்தை தேவன் துவக்கி வெற்றியாய் செய்து முடித்தார்.
காத்திருத்தல் அனுபவம் என்பது தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடந்தே தீர வேண்டியதாக இருக்கும். இந்த சூழ்நிலையில் நமக்கு ஆறுதலாய் இருப்பது தேவ சமூகமே. வேதத்தில் தேவனுக்காய் காத்திருந்தவர்களுடைய வாழ்வின் முடிவில் தலைகுனிவு என்பதை அவர் அனுமதிக்கவே இல்லை. அவர்கள் எல்லாரும் காத்திருந்து தங்கள் விசுவாசத்தை மிளிரச் செய்தார்கள். ஆபிரகாம் வாக்குத்தத்தம் நிறைவேற எத்தனையோ ஆண்டுகள் காத்திருந்தார். முடிவு மகிழ்ச்சி, ஆசிர்வாதம். லாசரு மரித்துப்போனானென்று தெரிந்தும் இயேசு தாமதம் செய்தார். ஆனாலும் முடிவில் தேவ நாமம் மகிமைப்படும்படியாக அவனுக்கு அற்புதம் செய்தார்.
பிரியமான சகோதர சகோதரிகளே! உங்களுக்கு வேலை , திருமணம் சரீரசுகம், கடன் போன்ற காரியங்களில் தேவன் காத்திருக்கிற சூழ்நிலையை அனுமதித்திருக்கிறாரா? சோர்ந்து போகவே வேண்டாம். தேவ சமூகமும், வேத வசனமுமே உங்கள் ஆறுதலாய் இருக்கட்டும். அவர் தாமதமானாலும் தரமானதைத் தருவார். ஏற்ற காலமும் நேரமும் வரும்போது அவர் துரிதமாக செயல்பட்டு நாம் நினைப்பதற்கு மேலாக காரியங்களை செய்து முடிப்பார். அது நம்முடைய கண்களுக்கே ஆச்சரியமாயிருக்கும். அல்லேலூயா!
- S. மனோஜ் குமார்
ஜெபக்குறிப்பு:
எழுப்புதல் சீஷத்துவ முகாமில் பங்குபெற்ற வாலிபர்கள் எடுத்த தீர்மானங்களில் நிலைத்திருக்க ஜெபியிங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250