By Village Missionary Movement
Tuesday, 25-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 26-10-2022
தொடந்து முன்னேறு
“ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” - நீதி. 24:10
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில், பல கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடப்பதுண்டு. வரலாற்றில் தொடந்து 252 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த ட்ரினிட்டி கல்லூரியானது நீண்ட இடைவெளிக்கு பின்பு 2012 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி ஏல் பல்கலைக்கழகத்துடன் நடைபெற்ற ஸ்குவாஷ் விளையாட்டுப்போட்டியில் தோல்வியைத் தழுவியது. இக்கல்லூரி 14 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக தோல்வியைத் தழுவியது. அந்த குழுவின் பயிற்சியாளர் பால் அசையன்ட்டினின் நண்பரும் பிரசித்தி பெற்ற கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் “நன்று, திரும்பவும் எழும்பு“ என்று ஒரு மூன்று வார்த்தையுள்ள செய்தியை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். நாம் அனைவரும் தோல்வியுறும்போது மீண்டும் எழும்ப வேண்டும். மாறாக மனச்சோர்வினால் நின்றுவிடக்கூடாது. வாழ்க்கையில் தோல்வியை பார்க்காதவர்கள் அதை சந்திக்கும் பொழுது விரக்தியுற்று காணாமல் போய்விடுகின்றனர்.
1 இராஜாக்கள் புத்தகத்தில் எலியா தீர்க்கதரிசி, யேசபேலின் கடிதத்தின் மூலம் மனமடிவடைந்து “போதும் கர்த்தாவே” என்று பின்வாங்குகிறார். ஆனால் கர்த்தரோ எலியாவிடம், “எழுந்திருந்து போஜனம் பண்ணு, நீ போக வேண்டிய பிரயாணம் வெகு தூரம்” என்றார். நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விரும்பத்தகாத காரியங்கள் நம் வாழ்க்கையில் குறுக்கிடும்போது தவறான முடிவுக்குள் வந்து விடுகிறோம். ஆனால் அதற்கு இடங்கொடாமல் வேத வசனம் என்ன சொல்லுகிறது என்று நிதானித்து அறிய வேண்டும். நாம் சோர்ந்து போவது பின்வாங்குவது இவைகளை ஒருபோதும் வேதாகமம் ஏற்றுக்கொள்கிறதில்லை. மாறாக, சற்று ஆராய்ந்து தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கவே தேவன் விரும்புகிறார்.
எபிரெயர் நிருபத்தில் “மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்“ என்று வாசிக்கின்றோம். தொடர்ந்து கூறும்பொழுது , நாமோ கெட்டுப்போக பின் வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாய் இருக்கிறோம்’’ என்று எழுதுகிறார். கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இன்றைய செய்தியில், ‘’ஆபத்துக்காலத்தில் சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகினது’’ என்று வாசிக்கிறோம். பிரச்சனைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் வரும்போது வேதவசனத்தைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து முன்னேறுங்கள். கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் ஓட்டமும், செயல்பாடுகளும் தடைபடாதிருக்கட்டும்.
- P.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
நாம் செய்யும் கைப்பிரதி ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் நபர்களின் உள்ளங்களில் ஆண்டவர் கிரியை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250