By Village Missionary Movement
Friday, 07-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 08-10-2022
100% வெற்றி
“நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” - ரோமர் 12:21
அநேக ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு அமெரிக்கப் புரட்சியின்போது துருக்கியப் போர்வீரன் ஒருவன் ஒரு தாதியையும் அவன் சகோதரனையும் கடுமையாய் தாக்கினான். தன் சகோதரன் சித்திரவதை செய்யப்படுகையில் அந்தத் தாதி தன் ஜீவனை தப்புவித்துக் கொண்டாள். ஆயினும் ஒரு மருத்துவமனையில் அவள் நிர்ப்பந்தமாய் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். சில ஆண்டுகளுக்குப் பின்பு அந்த துருக்கியப் போர்வீரன் மரணத்துக்கேதுவான படுகாயமுற்றவனாய் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இந்தத் தாதியின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டான். தன் சகோதரனைக் கொலை செய்தவன் என்று தெரிந்தும், தான் கிறிஸ்தவளாயிருப்பதால் உயிர் ஊசலாடும் நிலையில் நம்பிகையற்றவனாயிருந்த, அவனைக் கண்ணுங்கருத்துமாய் பராமரித்தாள். அந்தப் போர்வீரன் சற்றுத் தேறுதலடைந்த போது தன்னை பராமரித்த தாதியை அடையாளம் கண்டுகொண்டான். “இத்தனை அன்புடன் என்னைப் பராமரிக்க உன்னால் எப்படி முடிந்தது?” என்றான். “உன் எதிரியையும் நேசி என்று சொன்ன இயேசுவைப் பின்பற்றுகிறேன்” என்று பதிலளித்தாள். இந்த இயேசுவை அவனும் அறிய அதிக வாஞ்சையுள்ளவனானான். அவள் காட்டிய அன்பின் மூலம் அந்த ஆத்துமாவை கர்த்தருக்கென்று அறுவடை செய்தாள்.
தேவனுக்குத் துரோகிகளாய் அவரை விட்டுத் தூரமாய் இருந்த நம்மை அவர் மன்னித்து தமது அன்பின் கயிறுகளால் கட்டி, இழுத்து மிகவும் அதிகமாய் நேசிக்கிறார். அவர் தமது அன்பால் நம்மைத் தேர்ந்தெடுத்து நிலையான சந்தோஷம், சமாதானம், பாவ மன்னிப்பு என்பவைகளாகிய உலகத்தில் கிடைக்காத பொக்கிஷங்களை நம்முடைய உள்ளத்தில் வைத்திருக்கிறார்.
அன்பானவர்களே! நமக்கு எதிராய் செயல்பட்டவர்களை மன்னிப்பது என்பது சவாலான காரியம் தான். ஆனால் இப்படிப்பட்ட காரியங்களில் நம்மை வெற்றியடையப் பண்ணும்படி தேவன் மிகவும் ஆர்வமுள்ளவராயிருக்கிறார். நம்முடைய மன நிலையிலிருந்து நாம் பார்த்தால் மன்னிக்கும் சுபாவம் என்பது ஒரு சதவீதம் கூட நமக்குள் வராது. ஆனால் தேவன் நம்முடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து நம்மை நேசிப்பதைச் சிந்தித்து தியானிப்போமானால், இந்தச் சவாலில் நூற்றுக்கு நூறு சதவீதம் நிச்சயமாய் வெற்றியடைந்து, எவரையும் மன்னித்து, சிநேகித்து ஆத்தும ஆதாயம் செய்ய முடியும்!
- K. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
இரண்டாவது சனிக்கிழமையான இன்று நமது கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் விடுதலை உபவாசக் கூடுகைக்காக, மேலும் உசிலம்பட்டி பணித்தளத்தில் நாளை நடைபெறவிருக்கும் “ எழுப்புதல் விரும்புவோர் முகாம்”ல் பங்குபெறும் நபர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250