By Village Missionary Movement
Friday, 07-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 07-10-2022
விடுதலையின் தொனி ஒலிக்கட்டும்
“அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும்,...நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கி விடுகிறதும்,... அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.” - ஏசாயா 58: 6, 7
1963 -ஆம் ஆண்டில் மார்ட்டின் லுத்தர்கிங் Junior –ன் தலைமையில் “சமாதானத்திற்கான பவனி” அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. அதில் “நான் ஒரு கனவு வைத்திருக்கிறேன்” என்ற கருத்தில் அவர் ஆற்றின சொற்பொழிவு, நாட்டின் மூலை முடுக்கில் உள்ளவர்களையும், விடுதலை தாகத்திற்கு அறைகூவி எழுப்பிற்று. இதனிமித்தம் அநேகரிடத்திலும் அவரது சமாதான இயக்கத்தில் சேர்ந்தவர்களிடத்திலும், உண்மையான மாற்றம் விரைவில் வரத் துவங்கியது. இந்த சொற்பொழிவு, அமெரிக்க மக்கள் தங்களைக் கொடுமைப்படுத்துபவர்களிடமிருந்தும், ஒடுக்குவோரிடமிருந்தும், விடுதலைக்காக போராட வேண்டும் என்ற உள் உணர்வைத் தட்டி எழுப்புவதாக இருந்தது.
ஏசாயா தீர்க்கதரிசியின் காலத்திலே தனிப்பட்ட மக்களிடத்திலும், தேசத்திலும் நீதி, நியாயம் இல்லாதபோது ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களின் மூலம் மக்களின் மனச்சாட்சியை கர்த்தர் தட்டி எழுப்பினார். அவர்களது தேவபக்தி தங்களுடன் உள்ள மக்களைக் கொடுமைப்படுத்துகிறோம் என்ற உணர்வுகூட இல்லாத நிலைக்குக் கொண்டு செல்வதாயிருந்தது. தேவனது மக்கள் ஏழைகளை ஒடுக்கினர். அதற்குப் பதிலாக நீதியான வாழ்க்கை வாழவும், தேவ பக்திக்கடுத்த காரியங்களிலும், உபவாசம் போன்றவற்றிலும் பயிற்சி எடுத்தனர். (ஏசாயா58:1-5)
ஆனால் கர்த்தர் அன்றாட வாழ்வில் சுற்றியுள்ள ஜனங்களிடம் அன்பும் பரிவும் காட்டுவதே எனக்கு உகந்தது என்று கூறுகிறார். பசியுள்ளவனுக்கு உணவு கொடுப்பதும், துரத்துண்ட ஏழையைச் சேர்த்துக் கொள்கிறதும் , ஆடையில்லாதவர்களுக்குக் கொடுப்பதுமே உகந்த உபவாசம் என்கிறார். ஆம், நம்மால் முடிந்த வரை பாடுகளோடு கட்டுகளோடு உள்ள ஜனங்களை விடுவிக்க உதவ வேண்டும். ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் நாம் பெற்ற இரட்சிப்பின் சந்தோஷத்தை, நம்மைப்போல அதை அறியாமல் நரகத்தை நோக்கிச் செல்கின்ற மக்களிடம் சொல்ல வேண்டும். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாகக் கூறப்பட்டவை அனைத்தும் நம் மூலமாக நடக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவர்களாய், பிசாசின் பிடியில் அகப்பட்டு பாவத்தில் சிக்குண்டவர்களை குணமாக்குகிறவர்களாக இருந்த ஆண்டவர் இயேசுகிறிஸ்துவைப் போல, விடுதலையின் செய்தியைச் சொல்லும்போது, பிசாசின் பிடியில் அகப்பட்ட யாவரையும் விடுதலையாக்குகிறவர்களாக இருப்போம். அல்லேலூயா !
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
“மோட்சப் பயணம்” பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதும் நபர்கள் மற்றும் இணைந்து பணியாற்றும் நபர்கள் ஒவ்வொருவரையும் தேவன் பெசலெயேலின் ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250