By Village Missionary Movement
Tuesday, 27-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 28-09-2022
அழைப்பின் குரல்கேள், எருசலேமே!
“உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.” - சங்கீதம் 91:1
ஜான் பனியனின் மோட்சப் பிரயாணம் புத்தகத்தில் பொருள்கூறுபவர் என்பவர் கிறிஸ்தியானையும் அவனது பிள்ளைகளையும் ஓரிடத்திற்கு அழைத்துச்சென்று, அங்கு நடப்பதைக் கவனிக்கும்படி கூறினார். அங்கே ஒரு கோழி தன் குஞ்சுகளுடன் இரை மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டனர். அவைகளில் ஒரு குஞ்சு தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் வைக்கப்பட்ட கிண்ணத்தைக் கண்டு தண்ணீர் பருகிய ஒவ்வொரு முறையும் தன் தலையை உயர்த்தி வானத்துக்கு நேராக நோக்கியது. பொருள்கூறுபவர், “இந்த கோழிக்குஞ்சு செய்வதைப் பார்த்தீர்களா? தான் பருகும் தண்ணீருக்காக தன் கண்களை ஏறெடுத்து பரம பிதாவுக்கு நன்றியைத் தெரியபடுத்துவதைக் கவனீத்தீர்களா?” என வினவினார். யாவரும் அதிசயப்பட்டு கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளும் கர்த்தரைப் போற்றுவதைக் கண்டு அவர்களும் கர்த்தரைத் துதித்தனர். மேலும், அவர்கள் கோழியிடமிருந்து நான்கு விதமான அழைப்பின் சத்தத்தைக் கண்டறிந்தனர்.
1. வெளிச்சம் போதாமல் இருக்கும் நேரங்களிலும், வழி புலப்படாமல் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் அதன் குஞ்சுகளுக்கு கொடுக்கப்படும் பொதுவான அழைப்பு.
2. இரை இருக்குமிடத்தைக் காண்பிக்கவும் கொடுக்கவும் செய்வதற்கான விசேஷ அழைப்பு.
3. சத்துரு வரும்போது, ஆபத்து அருகிலிருக்கும் போது, கூவி அழைக்கும் எச்சரிப்பின் அழைப்பு.
4. அரவணைப்பதற்காக அழைக்கும் மெல்லிய அன்பின் அழைப்பு.
இந்த நான்கு விதமான அழைப்புகளின் ஞான அர்த்தத்தைப் பொருள்கூறுபவர் விளக்கினார். ஆண்டவரும் இருளிலிருக்கிற ஜனங்களிடம், “நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்” (ஏசாயா 41:10) என்று கூறி தேவபிரசன்னத்தை நமக்கு வாக்களிக்கிறார். வாழ்வாதாரம் துவங்கி பரலோக ஆசீர்வாதம் வரை நாடித்தேடுவோரிடம், “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” (மத்தேயு 7:7) என்கிறார். சத்துரு வெள்ளம்போல் வரும்போதும், “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்“ (யாக்.4:7) என்று எச்சரிப்புக் கொடுத்து ஒத்தாசை அளித்து அடைக்கலம் தருகிறார். அவர் செட்டைகளின்கீழ் அடைக்கலம் புகுவாய் எனக் கூறி அரவணைத்துக் கொள்கிறார் (சங்கீதம் 91:4).
ஆம், பிரியமானவர்களே, கோழி தன் குஞ்சுகளைச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக எத்தனை தரமோ நம்மைச் சேர்த்துக்கொள்ள நம் பரமபிதா நமக்கு அழைப்புக் கொடுக்கிறார். அழைப்பை அசட்டை பண்ணாமல், சாக்குப்போக்குச் சொல்லாமல் ஜல்தியாய் ஓடிவந்து காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவோம் இரட்சிப்பு.
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் அநேகர் போஷிக்கப்பட; ஆண்டவரை அறிந்துகொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250