By Village Missionary Movement
Monday, 26-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 27-09-2022
கசப்பான வேர்
“வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு” - யாக்கோபு 3:16
உக்ரைன்-ரஷ்யாவுக்கு இடையேயான போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர் ஒருவரின் அடக்க ஆராதனையின் போது இருநாட்டு சபை போதகர்களும் கைகலப்பில் ஈடுபட்ட ஒரு சம்பவம் அநேகரை வேதனைக்குட்படுத்தியது. Tomashpil என்ற இடத்தில் போரில் உயிரிழந்த Oleksandar Ziniv என்னும் உக்ரைன் ராணுவ வீரரின் அடக்க ஆராதனை நடைபெற்றது. இதில் பேசிய உக்ரைன் சபைப் போதகர் “நாம் அனைவரும் ரஷ்ய மக்களையும், திருச்சபைகளையும் புறக்கணிக்க வேண்டும்“ என்று பேசினார். இக்கூட்டத்தில் அமர்ந்திருந்த மற்றொரு ரஷ்ய சபைப் போதகர் “இப்படியெல்லாம் பேசக்கூடாது“ என்று கண்டித்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்த சிலுவையைத் தூக்கி உக்ரைன் போதகரை தாக்கவும் ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் அங்கிருந்த ராணுவ வீரர்கள் தலையிட்டு இரு போதகர்களையும் சமாதானப்படுத்தினார்கள். சமாதானத்தைப் பிரசங்கிக்க வேண்டிய போதகர்களே சண்டையிட்டுக் கொள்வது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.
இன்றைய வேத பகுதியில் யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் கசப்பான வைரக்கியத்தைப் பற்றி எழுதுகிறார். சக மனிதரைக் குறித்ததான வெறுப்பு! அது கசப்பு நிறைந்ததாக மாறி இருதயத்திற்குள் ஒளிந்து கிடக்கிறது. சமயம் வாய்க்கும் போதெல்லாம் அந்தக் கசப்பு நம் கிரியைகளில் வெளிப்படுகிறது. இதுவே கலகமும், சகல துர்ச்செய்கைகளுக்கும் வேர் என்று ஆவியானவர் நமக்கு எழுதுகிறார்.
சிலர் மீது கொண்டிருக்கும் கசப்பு அது நமக்கு பெரிய பாவமாக தெரிகிறது இல்லை. அதே நேரத்தில் இந்தக் கசப்பானது அநேகருக்கு மன வியாதியையும், சில நேரங்களில் சரீரத்திலும் வியாதியைக் கொண்டு வந்து விடுகிறது. அதிக பட்சமாக “கொலை பாதகன்“ என்னும் நிலைமைக்கும் இந்தக் கசப்பு என்னும் சுபாவம் ஒவ்வொரு மனிதனையும் தள்ளிவிடுகிறது. தாவீதின் மேல் எழுந்த கசப்பு சவுலின் வாழ்க்கையை அழித்தது. அம்னோன் மேல் உண்டான வெறுப்பு, அப்சலோமின் வாழ்க்கையை கெடுத்துவிட்டது. உங்களுக்கு யார் மீதாவது கசப்பு இருக்குமென்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கசப்பிற்கான வேர் எங்கிருக்கிறது என்று யோசித்தோமானால், அது அந்நபரை மன்னிக்க முடியாத காரியத்திலிருந்தே துவங்கினதை நாம் அறியமுடியும். ஆகவே அவர்களை மனதார மன்னிக்கும் இருதயத்தை தேவன் தரும்படி ஜெபிப்போம். தேவனிடம் உங்களைத் தாழ்த்தி, ஜெபித்து கசப்பு நிறைந்த பகுதியில் இருந்து வேதம் சொல்லுகிற திவ்விய சுபாவத்திற்குள் நாம் பிரயாசப்படுவோம். ஆண்டவர் நம்மை வழிநடத்துவாராக.
- P.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு
வட மாநிலங்களில் நமது ஊழியத்தின் எல்லைகள் தேவ நாம மகிமைக்கென்று விரிவாக்கப்பட, புதிய பணித்தளங்கள் ஆரம்பிக்கப்பட, கர்த்தர் வழிவாசலைத் திறந்தருள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250