By Village Missionary Movement
Sunday, 25-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 25-09-2022 (Kids Special)
கவனமாய் பேசு
“மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது.” – நீதிமொழிகள் 15:23
ஒரு அழகான ஆற்றங்கரை, பார்ப்பதற்கு இயற்கை அழகு கொட்டிக்கிடக்கின்ற பசுமையான காட்சிகள். அங்கு நிறைய மரங்கள் பூத்துக் குலுங்கி சந்தோஷமாய் இருந்தது. குட்டீஸ் நீங்களும் ஆற்றில் குளித்து ஜாலியா enjoy பண்ணியிருக்கீங்களா? எழும்பி வர மனசே இருக்காது இல்லையா? அந்த ஆற்றங்கரை பக்கத்திலே ஒரு வேப்பமரம், ஒரு புளியமரம் இரண்டும் பேசிக்கொண்டது. புளியமரம் சொன்னது, “எனக்கு ரொம்ப வயதாகிவிட்டது. என்னுடைய வேர்கள் பட்டுப்போய், காய்ந்து தளர்ந்துவிட்டது. என் உடலும் ரொம்ப பலவீனமாகிவிட்டது. இதனால் நான் எப்பொழுது காற்று, மழையில் சாய்ந்து அடித்துச் செல்லப்படப் போகிறேனோ தெரியவில்லை?” என்று. உடனே வேப்பமரம் “உன்னைப்போல நண்பன் கிடைப்பது மிகவும் கடினம்” என வருத்தப்பட்டது.
அப்பொழுது ஒரு குருவி புளியமரத்திடம் வீடு கட்டிக்கொள்ள அனுமதி கேட்டது. புளியமரம் மறுத்து விட்டதால் வேப்பமரத்தில் கூடு கட்டி சந்தோஷமாய் வாழ்ந்தாலும், இந்தப் புளிய மரம் தனக்கு இடம் தரவில்லையே என குருவி வருந்தியது. திடீரென்று வீசிய பெருங்காற்று மற்றும் மழையினால் அந்தப் புளிய மரம் சாய்ந்து ஆற்றில் விழுந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. “உனக்கு நல்லா வேணும், எனக்கு உதவி செய்யவில்லை அல்லவா? அதுதான் உனக்கு இந்த தண்டனை” என்று குருவி சொல்ல, வேப்பமரம் பதில் சொன்னது, “நிறுத்து உன் பேச்சை, உண்மை தெரியாமல் பேசாதே. அதற்கு வயதாகி விட்டதால் சீக்கிரம் இப்படிப்பட்ட நிலை வரும். உனக்கு இடம் கொடுத்தால் நீயும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவாய் என்ற நல்லெண்ணத்தில் தான் உன்னைக் கூடுகட்ட அனுமதிக்கவில்லை” என்று வேப்பமரம் சொல்லி தேம்பி அழுவதைப் பார்த்த குருவியின் கண்கள் குளமாயின. குருவி பறந்து போய், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட புளியமரத்தைப் பார்த்து, “நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்னை மன்னித்துவிடு புளியமரமே” என்று கூறியது. கரையோரம் ஒதுங்கிக் கிடந்த அந்த மரத்தை ஒரு மர வியாபாரி எடுத்துக் கொண்டு போய் மர ஜாமான்கள் செய்ய கொண்டு போனார். மரித்தும் பயனுள்ளதாய் இருக்கின்ற புளியமரத்தின் தன்மையை நினைத்து ஆச்சரியப்பட்டது குருவி.
அன்பான தம்பி-தங்கை, பேசுவதில் கவனமாக இருக்கவேண்டும். நமக்கு நன்மை செய்யவில்லை என்பதற்காக மற்றவர்களைத் தவறாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது. மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்கின்ற வார்த்தைகளைப் பேச கவனமாய் இருப்போம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250