By Village Missionary Movement
Thursday, 22-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 22-09-2022
பெலவீனங்கள் எதற்கு?
“...நாங்கள் முன் குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்.“ - எபேசியர் 1:12
லித்துவேனியா தேசத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாகக் கண்காணிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட அந்த நாட்களில் ஒரு முதிர்வயதான தாயார் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். வியாதியஸ்தரான படியால் காவலர்களால் கண்காணிக்கப்படவில்லை. அந்த வியாதியின் கொடூரத்தால் கால்கள் திருகி, உடலின் அடியில் சுருண்டிருந்தது. தலை குனிந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது, உடலின் அங்கங்கள் சுருண்டிருந்த நிலையில், கண்களும் வலது கையின் ஆள்காட்டி விரல் மட்டும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது.
காலை உணவுக்குப்பின் சோஃபாவில், கீழே விழாதபடி தலையணைகளால் சுற்றிவைக்கப்பட்டு, மேஜை மீது டைப்ரைட்டர் வைத்து, அந்த ஒற்றை விரலால் இரவு முழுவதும் அந்தத் தாயார் டைப் செய்தது என்ன தெரியுமா? ரஷ்ய மொழியிலும், லாட்விய மொழிகளிலும், பிராந்திய மொழிகளிலும், வேதப் புத்தகங்களையும் மற்றும் பில்லிகிரஹாம் வாட்ச்மேன்நீ போன்றோரின் புத்தகங்களையும் மொழியாக்கம் செய்தும் டைப் செய்தார், ஜெபிக்கவும் செய்தார் அந்தத் தாயார்.
நம் வேதத்திலும் கூட பரிசுத்த பவுல் தன்னுடைய பலவீனத்திலும் தேவனுக்கென்று நற்செய்தி அறிவித்தார். அவருடைய சரீரத்திலும் ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது என்று வாசிக்கிறோம். ஆம், பலவீனங்கள், பிரச்சனைகள், கவலைகள் ஒருபோதும் அவரை தேவனுடைய வேலையை செய்யத் தடை செய்யவில்லை. இவையெல்லாம் எனக்கு முன்குறிக்கப்பட்டவைகள் என்பதை பவுல் அறிந்து கொண்டதால் இந்த உலகத்தின் காரியங்களைத் தாண்டி கிறிஸ்துவுக்காக பெரிய காரியங்களைச் செய்தார்.
ஆம் எனக்கன்பானவர்களே, ஆண்டவரைத் தேடியும் ஏன் எனக்கு இந்த பெலவீனம்? நான் ஏன் இந்தக் குறைகளோடு பிறந்தேன் என அங்கலாய்க்கிறீர்களா! கலங்காதிருங்கள். நம்மைப் படைத்தவர் அந்தத் தாயாரை தம்முடைய நாம மகிமைக்கென்று பயன்படுத்தியவரல்லவா? நிச்சயம் உங்களையும் அவர் நாமம் மகிமைப்படும்படி பயன்படுத்துவார். உங்கள் பெலவீனத்திலும் அவரைத் துதியுங்கள். கர்த்தரிடத்தில் அற்புதங்களை எதிர்பாருங்கள். கர்த்தர் நிச்சயம் பெரிய காரியங்களைச் செய்வார்.
- Mrs. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
பணித்தளங்களில் நாம் சந்திக்கின்ற சிறுவர்கள், வாலிபர்கள் கர்த்தருக்குள் முடிவுபரியந்தம் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250