By Village Missionary Movement
Monday, 19-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 20-09-2022
புறக்கணிப்பு
“வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைகல்லாயிற்று“ - சங்கீதம் 118:22
ஒரு கட்டிடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமாக வைத்து சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல் பல சித்தாள்கள் நின்று, வேலை செய்து கட்டிடம் உயர்ந்து கொண்டே போகும். அந்தக் கட்டிடத்துக்கு வர்ணங்கள் தீட்டி எல்லாம் முடிந்த பிறகு ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக்கொண்டே வருவார்கள். வீடு கட்டி முடிக்கப்பட்ட பின்பு, கிரஹப் பிரவேசத்தன்று அந்த சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் போட்டுவிட்டு, வேறெங்கேயோ வளர்த்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்திற்கே சொந்தமாகும். இதில் உள்ள உண்மை என்ன? அந்த வாழைமரம் 3 நாள் வாழ்க்கைதான் வாழும். ஆடு – மாடுகள் மேயும், குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் ஆயத்தமாயிருக்கும்.
வேதத்தில் 1 சாமுவேல் 17-ம் அதிகாரத்தில் தாவீதுக்கும், கோலியாத்துக்கும் நடந்த யுத்தத்தை நாம் அறிவோம். அதில் கோலியாத் தாவீதுடன் யுத்தம் செய்வதற்கு தலையின் மேல் வெண்கலச் சீராவையும், கால்களிலே வெண்கலக் கவசத்தையும் தன் தோள்களின் மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்து நின்றான். (1சாமு.17:5,6). ஆனால் இந்த தாவீதோ எல்லோருடைய பார்வைக்கும் மிகவும் அற்பமாக எண்ணப்பட்ட ஐந்து கூழாங்கற்களோடு யுத்தத்திற்கு சென்றான். ஆயுதத்தை பிடித்துக்கொண்டிருந்த கோலியாத், அற்பமான கூழாங்கல்லை கையில் வைத்திருந்த தாவீதிடம் தோற்றுப்போனான். தாவீது ஒரு கல்லால் கோலியாத்தை வீழ்த்தினான். அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால் அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
இதை வாசிக்கின்ற தேவ பிள்ளைகளே! சவுக்கு மரத்தைப் போலவும், கூழாங்கல்லைப் போலவும் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். இல்லையென்றால் மனிதர்கள் உங்களிடம் உதவியைப் பெற்றுக்கொண்டு, உங்களை தேவைக்கு மட்டும் உபயோகித்திருக்கலாம். கவலை கொள்ளாதீர்கள். ஒரு வேளை இன்று நீங்கள் இருக்கக்கூடிய சுழ்நிலைகளைக் கண்டு அற்பமாய் எண்ணப்படலாம். ஏனென்றால், இயேசுவும் மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், அற்பமாய் எண்ணப்பட்டவருமாகவே இருந்தார். இன்று காண்கிற சூழ்நிலைகள், பிரச்சனைகள் எதுவும் நிரந்தரம் இல்லை. எல்லாம் நிச்சயம் ஒருநாள் நம் தேவனால் மாறும். நம்பிக்கையோடு இருங்கள். தேவன் சூழ்நிலைகளை மாற்றி உங்களை உயர்த்துவார்
- Mrs.. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு
“யோசுவாவே எழும்பு” என்ற நிகழ்ச்சி வாலிப ஆண்பிள்ளைகளுக்கென்று ஞாயிறுதோறும் நமது “ You tube channel “ -ல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாலிபப் பிள்ளைகள் தொடப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250