By Village Missionary Movement
Friday, 16-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 17-09-2022
கண்ணீர் குப்பி
“…தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்....” - வெளி. 7:17
முற்காலத்தில் பெர்சியா நாட்டில் ஒரு வித பழக்கம் உண்டு. துயரமான கூட்டங்கள் கூடும் இடங்களில் அங்கிருந்த ஆசாரியர்கள் அழுதுகொண்டிருக்கிறவர்களின் கண்ணீர்களை பஞ்சு மூலம் சேகரித்து அதைப் பிழிந்து, கண்ணீர் குப்பிகளில் சேமித்து மிகவும் பாதுகாப்பாக வைப்பார்கள். மருந்துகள் பலனற்று மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு இக்கண்ணீரைப் பயன்படுத்தினால் புத்துயிர் பெறுவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. தங்களுக்குரியவர்கள் மரித்த பின் காணிக்கையாக, குப்பிகளிலுள்ள கண்ணீரையும் ஊற்றி, கண்ணீர் குப்பிகளையும் பிரேதங்களோடே வைத்து அடக்கம் செய்துவிடுவர்.
வேதத்தில் கண்ணீரோடு தேடிய ஒருவரையும் தேவன் கைவிடவே இல்லை. பிள்ளைக்காய் அழுத ஆகார் (ஆதி. 21:16) தன் மகனை இழந்து புலம்பிய நாயீன் ஊர் விதவை (லூக்கா 7:12,13), அரசனான எசேக்கியா ராஜா (ஏசாயா 38:3), தன் முகத்தை ஏறெடுக்கத் துணியாமல் மார்பிலே அடித்துக்கொண்ட ஆயக்காரன் (லூக்கா 18:13) இவர்களெல்லாம் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டதெல்லாம் அற்புதம், அற்புதம். இதனால் தான் தாவீது ராஜாவும் என் கண்ணீரை உம் துருத்திகளில் வைத்திருக்கிறீர் என்றார் போலும்.
ஆம் எனக்கன்பானவர்களே! வாழ்க்கையின் கசப்புகளால், தோல்வியினால், வியாதியினால், பாரத்தினால், ஏமாற்றங்களால், இழப்புகளால் துவண்டு போனீர்களோ? உங்கள் கண்ணீரைக் கணக்கு வைக்கும் கர்த்தர் உங்களோடு உண்டு. ஆறுதல் தேடி மனிதர்களை அல்ல, கர்த்தரையே நோக்குங்கள். கரம் பற்றி நடத்துபவர், மரண பரியந்தம் நம்மோடு கூட இருப்பவர். அவரே உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்.
1 சாமுவேல் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் நாம் அன்னாளைக் குறித்து வாசிக்கிறோம். அவளுக்குப் பிள்ளையில்லாதிருந்ததால், அநேகர் அவளை துன்புறுத்தினர். மன வேதனையின் உச்சியில் அவள், கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று முழங்கால் படியிட்டு அழுது வேண்டுதல் செய்கின்றாள். அவள் உதடுகள் மட்டுமே அசைந்ததேயல்லாமல் அவளின் சத்தமோ கேட்கப்படவில்லை. ஆசாரியனாகிய ஏலி, அவள் வெறித்திருக்கிறாள் என எண்ணுகிறார். ஆனால் அவளின் கண்ணீரின் சத்தத்தைக் கேட்டவர் கர்த்தர். அவர் அவளுடைய அழுகையை களிப்பாய் மாறப்பண்ணி சாமுவேலைக் கொடுத்தார். அன்னாள் மனிதர்களை நாடித்தேடாமல் கர்த்தரை நம்பி ஓடினாள். அற்புதத்தைப் பெற்றுக்கொண்டாள். அதுபோலவே, நாமும் தேவ சமுகத்தில் கண்ணீரை ஊற்றுவோம். கண்ணீரைக் கணக்கு வைப்பவர் நம் கர்த்தர் ஒருவரே.
- Mrs. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
இன்று தேனியில் நடைபெற உள்ள எழுப்புதல் விரும்புவோர் முகாமிற்காக, நாளை திருமங்கலத்தில் நடைபெற உள்ள முகாமிலும் தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ண ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250