By Village Missionary Movement
Thursday, 15-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 16-09-2022
உதாரத்துவம்
“…திராணிக்குத்தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்(கள்)...” - 2 கொரி. 8:3
உதாரத்துவதிற்கு இருபதாம் நூற்றாண்டு எடுத்துக்காட்டு இதோ! ஹெய்த்தி (Haiti) என்ற நாட்டுக்கு அருட்பணியாளராகச் சென்றார் ஸ்டாண்ஃபோர்ட் கெல்லி. அவர் ஊழியம் செய்துவரும் சிறிய சபையில் காணிக்கை எடுக்கும் போது, ரூ.300 - க்குச் சமமான ஒரு கரன்சி நோட்டைக் காணிக்கையின் நடுவே கண்டார். அது ஏழ்மை மிகுந்த அந்த நாட்டில் ஒரு மாதச் சம்பளத்துக்கு இணையான தொகையாகும். வசதி படைத்த ஒரு நாட்டில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையைக் காணிக்கையில் காணும்போது, அந்த நாட்டுப் போதகர் எவ்வளவு மகிழ்ச்சியடைவாரோ அவ்வாறு கெல்லி வியப்படைந்து நின்றார்.
இந்த அசாதாரணமான காணிக்கையை ஒரு விவசாயி கொடுத்தார் என்பதைக் கண்டறிந்தார். கெல்லி நேரடியாக விவசாயியிடம் விசாரித்தபோது அவர் பதிலளிக்கவே தயங்கினார். தொடர்ந்து அவரை வற்புறுத்தின போது அந்த விவசாயி, தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த குதிரையை விற்றுக் கொடுத்ததாக அவர் சொல்லக் கேட்ட கெல்லி வியப்படைந்தார். “நீங்களே ஏன் சபைக்கு வந்து அந்த காணிக்கையை கொடுத்திருக்கக் கூடாது?” என்று கெல்லி கேட்டார். “அணிந்துவர ஒருமேல் சட்டை இல்லாததே காரணம் “ என்று அந்த விவசாயி பதிலளித்தார்.
இன்று நாம் காணிக்கை கொடுக்கும் விதம் எப்படி உள்ளது? நாம் யாருக்கும் தெரியாமலேயே நிறைவாய்க் கொடுக்கிறோமா? அல்லது பிறர் அறிய வேண்டுமென்று கொடுக்கிறோமா? அநேக நேரங்களில் நாம் தேவனுக்கென்று காணிக்கை கொடுத்தாலும் மனிதர் புகழவேண்டும் என்ற எண்ணத்தோடு கொடுக்கிறோமே! நான் கொடுப்பது நாலு பேருக்குத் தெரிய வேண்டும் என்ற மனநிலையே நம்மில் இருக்கிறது. ஆனால் ஆண்டவர் இயேசு ஒருமுறை தேவாலயத்திற்குச் சென்ற போது, ஒரு ஏழை விதவையின் காணிக்கையைக் குறித்து கூறுகின்றார். அவள் தன் வாழ்வாதாரத்துக்காக தேவையானதாக இருந்த அந்த இரண்டு காசையும் காணிக்கையாகப் படைக்கின்றார். அதேபோல் மக்கெதோனியா நாட்டு மக்களை குறித்துக் கூறும்போது, அவர்கள் உதாரத்துவமாய் கொடுத்ததற்கு நானே சாட்சி என்று பவுல் கூறுகின்றார். ஏழை விதவையைப் போல் ஆண்டவரிடமே பாராட்டுப் பெறுமளவு நமக்குள்ளதையே கொடுப்போமா?
வேதம் கூறுகின்றது “உன் வலது கை செய்வதை இடது கை அறியாதிருக்க கடவது“ என்று. எனவே, நாமும் மேலே உள்ளவர்களைப் போல உதாரத்துவமாய்க் கொடுப்போம். தேவனிடமிருந்து நற்சாட்சி பெறுவோம். ஆமென்!
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு
மீடியா ஊழியங்களில் பணிபுரியும் ஊழியர்களை விசேஷித்த ஆவியினால் தேவன் நிரப்பி நடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250