By Village Missionary Movement
Wednesday, 10-Feb-2021இன்றைய தியானம்(Tamil) 10-02-2021
வாய்ப்பை பயன்படுத்துவோம்
“அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்கு பெற்றவனாயிருந்தான்.” – அப். 1:17
ஒரு நாட்டை ஆண்டு கொண்டிருந்த ராஜாவிற்கு ஒரு வழக்கம் இருந்தது. ஏதாவது ஒருநாள் நாட்டிற்குள் வலம் வருவார். அப்பொழுது தேவையுள்ள நபரிடத்தில் போய் உனக்கு வேண்டியது என்ன என்று கேட்பார். அந்த நபர் கேட்கும் காரியம் எதுவோ அதைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவார். அதைப்போல் ஒருநாள் மிகவும் அழுக்கு உடையோடு கால்கள் எல்லாம் புண்களோடு காணப்பட்ட ஒருவனைக் கண்டார். அவன் அருகில் ரதத்தை நிறுத்தி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அவன் சற்றும் யோசிக்காமல், “ராஜாவே நான் எப்பொழுதும் உங்களோடு இருக்க வேண்டும்” என்று சொன்னான். ராஜாவும் அவனைத் தன்னுடைய அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அவனை சுத்தப்படுத்தி, புண்களுக்கு மருந்திட்டு, காயங்கட்டி, அவனுக்கு அழகிய விலையுயர்ந்த வஸ்திரம் தரிக்குமாறு கட்டளையிட்டார். அவனை எப்போதும் தன் அரண்மனையிலேயே இருக்கும்படி வைத்துக்கொண்டார். சற்றும் எதிர்பாராமல் ராஜ வாழ்க்கை அவனுக்குக் கிடைத்தது. இதைக் கண்ட மற்ற பணியாளர்களுக்கு நம்மிடம் ராஜா கேட்கும்போது நாம்கூட இப்படி ஒன்றை கேட்கவில்லையே. நமக்குக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டார்கள்.
இதைப்போலத்தான் யூதாஸ் காரியோத்திற்கு இயேசுவோடு வாழுகிற வாழ்க்கை கிடைத்தது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் அவரோடு இருந்தான். இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களைக் கண்டவன், நித்திய வாழ்க்கையைக் குறித்து அறிந்தவன். ஆனால் பரிதாபம், உன்னதங்களில் இயேசுகிறிஸ்துவோடு வாழுகிற வாழ்க்கையை விட்டு விட்டு வெறும் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தான். அது மாத்திரமல்ல அப். 1:18ல் சொல்லப்பட்டபடி, “அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.” இயேசுகிறிஸ்துவோடு வாழுகிற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் அதை இழந்து போனான். ஆனால் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனோ தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி “இயேசுவை நோக்கி: ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.”
இதை வாசிக்கிற நாம், இரட்சிக்கப்பட்டும் இந்த உலகத்தின் மீது ஆசை கொண்டு, ஏதோ ஒரு பாவத்தில் சிக்கி, பலமுறை ஆண்டவர் எச்சரித்தும் இயேசுராஜாவோடு வாழுகிற நித்திய வாழ்க்கையைப் பெற தகுதியற்றவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? யோசித்துப் பார்ப்போம். வாழும்வரை தான் வாய்ப்பு, மரித்தபின் ஐசுவரியவானைப் போல எவ்வளவு கதறினாலும் கிடைக்காது. ஆகவே மனந்திருந்துவோம், தேவனோடு வாழுகிற நித்தியமான அந்த ராஜரீக வாழ்க்கைக்கு ஆயத்தமாவோம்.
- P.V. வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
நம்பிக்கை டி.வி.யில் ஒளிபரப்பாகும் டி.வி. நிகழ்ச்சியின் மூலம் அநேகர் தேவனை கிட்டிச் சேர ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250