By Village Missionary Movement
Wednesday, 07-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 08-09-2022
நீயும் இரங்க வேண்டாமோ?
“நான் உனக்கு இரங்கினது போல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ...” - மத்தேயு 18:33
ஜானிற்கு வயது 25, ஜான் தனக்கு ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருந்தான். ஒருநாள் சென்னையில் உள்ள Company -ல் இருந்து அவரது உறவினர் ஒருவரின் உதவியால் ரூ.60,000/- சம்பளம் தரக்கூடிய வேலைக்கு அழைப்பு வந்தது. ஜான் மிக ஆர்வத்துடன் டிப் டாப்பாக கிளம்பி அந்த நேர்முகத் தேர்வுக்கு சென்றான். சென்னையில் இறங்கி சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழியில் ஒரு முதியவர் வேக வேகமாக, மூச்சு வாங்க நடந்து வந்துகொண்டிருந்தார். திடீரென்று தடுமாறிக் கீழே விழுந்துவிட்டார். ஆனால் ஜான் அவருக்கு உதவி செய்யாமல் கண்டும் காணாதவாறு சென்றான். அந்தக் கம்பெனிக்குச் சென்று நேர்முகத் தேர்வு செய்யும் போது ஓர் அதிர்ச்சி, என்னவென்றால் அங்கு நேர்முகத் தேர்வு நடத்துபவர்களோடு அந்த முதியவரும் அமர்ந்திருந்தார். ஜானுக்கு எல்லாம் புரிந்து விட்டது. இந்த வேலையும் கிடைக்காமல் போனது.
வேதத்தில் மத். 18:22-34 இல் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு உவமையைக் கூறியதாக வாசிக்கின்றோம். கடனாளி ஒருவனை ராஜாவினிடத்தில் கொண்டு வருகின்றனர். ராஜா கடனைத் திருப்பிக் கேட்டபோது, இவனுக்கு மனமிரங்கி கடனை மன்னித்து விடுவிக்கின்றார். இந்த மனிதன் சந்தோஷமாக வீட்டுக்குச் செல்கின்றான். செல்லும் வழியில் தன்னிடம் கடன் வாங்கின ஒருவனைப் பார்த்து சட்டையைப் பிடித்து “என் கடனை இப்பொழுதே தந்து தீர்க்க வேண்டும்” என்று கடினமாக நடத்துகின்றான். அவன் மிகவும் ஏழையானதால் மனமிரங்கும்படி கால அவகாசம் கேட்கின்றான். இந்த மனிதனோ மனமிரங்காமல் இவனைத் தண்டிக்கிறான். இதை அறிந்த ராஜா இவனை அழைத்து இவனுக்கு மன்னிக்கப்பட்ட கடனை மீண்டும் செலுத்தும்படி கூறி உபாதிக்கிறவன் கைகளில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
இதை வாசிக்கின்ற அன்பு சகோதர சகோதரிகளே, மேற்கூறிய இரண்டு சம்பவங்களிலும் மற்றவர்களுக்கு உதவுதல் என்பது பிரதானக் கருத்தாக உள்ளது. அதுபோலவே, தேவன் நம்மேல் இரக்கமாயிருக்க, நாமும் பிறர் மீது இரக்கமாய் இருக்க வேண்டும் என்றும், கர்த்தர் நம் பாவங்களை மன்னித்தது போலவே நாமும் மன்னிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றார். ஆனால் பல நேரங்களில் நாம் இறுமாப்பான சிந்தை கொண்டவர்களாய், கோபம், எரிச்சல், பொறாமை, பகை போன்றவற்றை நம் மனதில் வைத்து, பிறருக்கு மன்னியாமல், அவர்களை பழிதீர்க்க முயல்கின்றோம் ஆனால் தேவனுக்கு முன்பாக இது பாவமாக எண்ணப்படுகின்றது. மேலும் ஆண்டவர் இயேசு கூறும்போது ஏழு எழுபது முறையானாலும் மன்னிக்க வேண்டும் என்று கூறுகின்றார். நாம் பிறருக்கு மன்னிப்பது போலவே நமது பாவங்களும் மன்னிக்கப்படும் என வேதம் கூறுகிறது. எனவே நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால் நாமும் பிறரது குற்றங்களை மன்னிப்போம்! பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்போம்.!!
- M. எப்ஸிபா
ஜெபக்குறிப்பு:
ஒத்த தரிசனத்தோடு செயல்படும் நற்செய்தியாளர்களை தேவன் நம்மோடு இணைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250