Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  08-02-2021
Share:

By Village Missionary Movement

Monday, 08-Feb-2021

இன்றைய தியானம்(Tamil)  08-02-2021

இணையுங்கள்! ஜெபியுங்கள்! 

“...உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்.” – மத்தேயு 18:19 

இரண்டு மூன்று பெண்கள் சேர்ந்து அக்கம் பக்கத்து கதைகளைப் பேசினால் சில வீடுகளின் அஸ்திபாரமே ஆட்டம் காணும். அதே பெண்கள் கூடி ஒருமனப்பட்டு ஜெபித்தால் பரலோகத்தையே அசைத்துவிட முடியும். இந்த உண்மையை உணர்ந்து விட்டால் ஆசீர்வாதம்தான். இப்படி  வீண்கதைகளைப் பேசி பொழுதைப் போக்கி வந்த மூன்று தோழிகள் ஆரம்ப கட்ட கொரோனாவின் கொடூர நாட்களில், ஜெபிக்கத் தீர்மானித்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி நாடுகளில் கொரோனா பாதிப்பு செய்திகளை கேட்டு அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, பாரத்தோடு ஜெபித்தனர். இறுதியில் அதேதெருவில் வெளியூர் சென்று வந்த ஒருவருக்கு கொரோனா என்றதும் கண்ணீரோடு ஜெபித்தனர். இரண்டு வாரத்தில் அவர் சுகமாகி வீட்டிற்கு வந்தார். அற்புதவிதமாய் யாருக்கும் பரவவில்லை என்பதை கண்டதும் ஜெபத்தின் மேன்மையை உணர்ந்தவர்களாய், இன்றுவரை அந்த ஜெபத்தை உற்சாகத்துடன் நடத்தி வருகின்றனர். பேதுரு சுவிசேஷம் அறிவித்ததின் நிமித்தம் அவரை சங்கிலிகளால் கட்டி சிறையிலடைக்க கட்டளையிட்டார் ஏரோது ராஜா. பஸ்கா பண்டிகை முடிந்ததும் சிறைச்சேதம் பண்ணவிருந்த பேதுருவோ கலக்கமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான். இதைக் கேட்ட சபை மக்கள் கூடி ஒருமனதோடு ஊக்கமாக ஜெபிக்கின்றனர். அதே நேரத்தில் சிறையில் தேவ தூதன் பேதுருவை எழுப்புகிறான். அப்பொழுது சங்கிலிகள் அறுபட்டு விழுகின்றன. பேதுரு எல்லாக் காவலையும் கடந்து சபையார் கூடி ஜெபிக்கும் வீட்டு வாசலுக்கே தேவ தூதனால் அழைத்து வரப்படுகிறான். அவர்கள் கூடி ஜெபிக்க ஆரம்பித்த போதே தேவன் செயல்படத் தொடங்கினார், பேதுருவும் தொடர்ந்து ஊழியம் செய்யத் தொடங்கினார். அவரால் அநேகர் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்க்கப்பட்டனர்.  

பிரியமானவர்களே! ஒருமனப்பட்டு குழுவாய் ஜெபிக்கும் ஜெபத்திற்கு மிகுந்த வல்லமையுண்டு. கூடி ஜெபிப்பதற்கு இது ஏற்றகாலம். ஆகவே நாட்களை வீணாக்காமல் உங்களுடன் ஏதோ ஒரு காரியத்தில் ஐக்கியப்படும் நபரை இயேசுவின் நாமத்தினிமித்தம் ஒன்று கூட்டி வாரத்தில் ஒருநாள் ஜெபிக்க ஆரம்பியுங்கள். தேவன் தரும் பதிலைக் கண்டு ஆச்சரியப்பட்டு போவீர்கள். உங்கள் ஜெபம் அநேகரின் கட்டுகளை அறுக்கும், அடைபட்ட இரும்பு கதவுகளைத் திறக்கும். இன்று அநேக ஊழியர்கள், மிஷனெரிகள் கூட பேதுருவைப் போல் பலவித சட்டங்களால், அதிகாரங்களால், குடும்ப பாரங்களால் கட்டப்பட்ட சூழலில் உறங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் கட்டவிழ்க்கப்பட்டு, விழித்து ஊழியம் செய்ய உங்கள் ஜெபங்கள் தேவை. உங்கள் ஜெபங்களுக்காகத் தேவன் காத்துக் கொண்டுள்ளார். அணு ஆயுதங்கள் சாதிக்காததை, மருந்து மாத்திரைகள் செய்யாததை நம் முழங்கால்கள் சாதிக்கும். ஆகவே குறைந்தது வாரத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் இரண்டு பேர் கூடி ஜெபிக்க முடிவெடுங்கள். அது வழக்கமாகட்டும். பின் ஜெபமே உங்கள் வாழ்வாக மாறிவிடும். ஆமென். 
-    Mrs. அன்புஜோதி ஸ்டாலின் 

ஜெபக்குறிப்பு:
பைபிள் காலேஜில் இணைந்துள்ள பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al