By Village Missionary Movement
Monday, 22-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 22-08-2022 (Youth Special)
வேண்டாம்
“உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” - 1யோவான் 2:15
சில ஆண்டுகளுக்கு முன்பு Home Life Magazine ஒரு காரியத்தை விளக்கும் வகையில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு தாயார் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி, பழங்களை உரித்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு உணவு பதார்த்தம்
(Salad) தயாரித்துக் கொண்டிருந்தார்கள். காய்கறிகளில் நறுக்கி எடுக்கப்பட்ட தேவையில்லாத பகுதிகள், பழத்தோல்கள் இவைகளைக் குப்பைத் தொட்டியில் போட ஒரு பக்கம் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
அப்பொழுது மகள் வந்து, “அம்மா, நான் உலக கேளிக்கை மையத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு போய் வருகிறேன்“ என்று அனுமதி கேட்டாள். அந்த கேளிக்கை மையம் சரியானதல்ல என்று அநேக மக்களால் வெளிப்படையாக பேசப்படுகிற ஒரு இடம். அதை மனதில் வைத்துக்கொண்டு அம்மா அந்த இடத்திற்குப் போவதை வெறுத்தவளாக மகளுடைய முகத்தை நோக்கிப் பார்த்தாள். “அம்மா நான் விருப்பப்பட்டு போகவில்லை. நான் வரவில்லை என்றால் என் தோழிகள் என்னை கிண்டலடிப்பார்கள். எனவே நான் போக வேண்டும் “ என்று கூறினாள்.
உடனே அந்தத் தாயார் குப்பையில் போட வைத்திருந்த அந்த கழிவுப் பொருட்களை ஒரு கை நிறைய அள்ளி நல்ல உணவு பதார்த்தத்துக்குள் அள்ளி போட்டாள். அம்மா ஏதோ அறியாமல் மறதியாக செய்கிறார்கள் என எண்ணி “அம்மா உணவு பதார்த்தத்திற்குள் குப்பையில் போடவேண்டியதை போடுகிறீர்கள்“ என்று குரல் கொடுத்தாள், “ஆம், தெரிந்துதான் போடுகிறேன்“ என்றாள் அம்மா. மகள் உடனே புரிந்துகொண்டவளாய். “இப்பொழுதே என் தோழிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் வரவில்லை என்று கூறிவிடுகிறேன்“ என்றாள்.
இதை வாசிக்கும் வாலிபக் கண்மணியே, நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கோ அல்லது மேற்படிப்பிற்கோ செல்லும்போது மற்ற நண்பர்களோடு எல்லா விஷயத்திலும் ஒத்துப்போக முடியாது. ஒரு சில பாவ காரியங்களுக்கு ‘No’ சொல்லித்தான் ஆக வேண்டும். இன்றே தீர்மானியுங்கள். தவறான பழக்கத்திற்கு நண்பர்கள் உட்படுத்தினாலும் தைரியமாக “No” சொல்லுங்கள். நீங்கள் உலக ஐக்கியத்திலிருந்து வேறுபிரியாவிட்டால் உலகம் உங்களை தேவனிடத்திலிருந்து வேறு பிரித்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானியேலைப் போல, யோசேப்பைப் போல. உயிருள்ள மீனைப் போன்று எதிர் நீச்சல் போடுங்கள். தப்பிக் கொள்வீர்கள்
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்.
ஜெபக்குறிப்பு
சங்கிலித் தொடர் ஜெபத்தில் இணைந்துள்ள ஒவ்வொருவரையும் ஜெப ஆவியினாலும் ஆத்தும பாரத்தினாலும், கர்த்தர் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250