By Village Missionary Movement
Friday, 05-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 06-08-2022
ஒரே வழி
“மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்;..” - நீதி.16:5
வேதத்திலே ஆமான் என்கிற ஒரு மனிதனைக் குறித்து எஸ்தர் புத்தகத்திலே வாசிக்கிறோம். அவன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சற்று திரும்பிப் பார்ப்போமா?
இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள 127 நாடுகளை அகாஸ்வேரு என்ற ராஜா அரசாண்டு வந்தார். அவர் தன்னிடத்திலுள்ள எல்லா பிரபுக்களுக்கும் மேலாக இந்த ஆமானை உயர்த்தி வைத்திருந்தார். அரண்மனையிலுள்ள எல்லாரும் அவனை வணங்கி நமஸ்கரித்தனர். ராணியான எஸ்தரின் நெருங்கிய உறவினரான மொர்தெகாய், அரண்மனை வாசலில் உட்கார்ந்திருப்பார். அவர் ஒரு யூதன் என்பதால் ஆமானை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆமான் அவர் மேல் கோபம் கொண்டு, தேசத்திலுள்ள எல்லா யூதர்களையும் கொல்ல திட்டம் தீட்டினான்.
ஒருநாள் எஸ்தர் ராஜாத்தி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ராஜாவும் ஆமானும் அழைக்கப்பட்டிருந்தனர். விருந்து முடித்து வீடு திரும்பிய ஆமான், தன்னை மதிக்காத மொர்தெகாயை கண்டு மிகுந்த எரிச்சலடைந்து, தன் மனைவி மற்றும் சிநேகிதர்களின் அறிவுரைப்படி மொர்தெகாயை தூக்கு மரத்தில் தூக்கிப்போட ஆயத்தம் செய்து, தானே அதில் தூக்கிலிடப்பட்டு மரித்தான்.
ஆமான் தன் வாழ்வில் அநேக நன்மைகளைப் பெற்றிருந்தான். அரண்மனையில் உயர் பதவில் இருந்தும் ஒரு சிறிய காரியத்திற்காக மூர்க்கம் கொண்டதால் தன் வாழ்க்கையையே இழந்தான். நாமும் கூட ஆமானைப் போல, “அனைவரும் என்னை மதிக்க வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும், கௌரவிக்க வேண்டும்” என அடிமனதில் எதிர்பார்க்கிறோமல்லவா? அப்படி நம்மை மதிக்காதவர்களுக்கு பல இடையூறுகளையும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளையும் தடுக்கிறோமா? “நான் யார்? நான் எவ்வளவு பெரிய பதவியிலிருக்கிறேன், எவ்வளவு படித்திருக்கிறேன், என்னிடம் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது,“ என உங்களை நீங்களே கௌரவப்படுத்திக்கொண்டு, பிறர் என்னை மதிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது பாவ சுபாவத்தின் வெளிப்பாடே ஆகும்.
பிரியமானவர்களே! நாம் வாழும் சமுதாயத்தில் காணப்படும் பிறரது உயர்வை சகிக்க முடியாத மனநிலை, பொறாமை, பிறரை அழிக்கத் துடிக்கும் தீய எண்ணம், கௌரவத்திற்காக செய்யும் செயல்கள் இவைகள் சமுதாயத்தை சீர்குலைத்துவிடும். இப்படிப்பட்ட மனநிலையிலிருந்து ஒரு தனிமனிதனின் உள்ளம் மாற்றப்படுவது மாத்திரமே, சமுதாயம் சீரடைய ஒரே வழி. தனிமனித வாழ்வில் பாவத்திலிருந்து விடுதலையை தேவன் மட்டுமே தரமுடியும். ஆகவே இச்சமுதாயம் தேவனைக் காண ஜெபிப்போம்.
- Mrs. ஜமீலா பார்த்திபன்.
ஜெபக்குறிப்பு:
திண்டுகல்லில் நடைபெறவுள்ள “எழுப்புதல் விரும்புவோர் முகாம்“ – மில் எழுப்புதலை வாஞ்சிப்போர் அதிக அளவில் பங்கு பெற, எழுப்புதலடைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250