Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  06-02-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 06-Feb-2021

இன்றைய தியானம்(Tamil)  06-02-2021

தெரிந்துகொண்ட பாத்திரம் 

“...என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.” – அப். 9:15

இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆப்பிரிக்கா தேசத்தில் சுவிசேஷம் என்னும் தீபத்தை ஏற்றி வைத்தவர் டேவிட் லிவிங்ஸ்டன். ஸ்காட்லாந்தில், ஏழ்மையான கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த லிவிங்ஸ்டன் குடும்ப வறுமையின் நிமித்தம் கடின உழைப்பால் மருத்துவம் படித்து அதில் சிறந்து விளங்கினார். அவரது 20வது வயதில் ராபர்ட் மொஃபர்ட் என்ற மனிதர் ஆப்பிரிக்காவை பற்றியும், அங்கு வசிக்கிற மக்களை பற்றியும் சொல்லும்போது அங்கு மிஷனெரியாக செல்ல தன்னை அர்ப்பணித்தார். 700 மைல் தூரம் பிரயாணப்பட்டு, அடர்ந்த காடுகளின் நடுவே பாதைகளைக் கண்டுபிடித்து, அநேக கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து ஊழியம் செய்தார். ஒரு முறை ஒரு ஆப்பிரிக்கன் அவரிடம் வந்து நீங்கள் ஏன் முன்னமே தேவனை அறிவிக்கவில்லை. என் முன்னோர்கள் தேவனை அறியாமலே மரித்து விட்டார்களே என்றான். இதை கேட்ட லிவிங்ஸ்டன் மனம் உடைந்து இன்னும் அதிகமாக பலவீனங்களின் மத்தியிலும் ஊழியம் செய்தார். ஆம், இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவிற்கு வெளிச்சத்தை கொண்டுவர தேவன் தெரிந்துகொண்ட பாத்திரமே டேவிட் லிவிங்ஸ்டன், இவர் ஜீவனுள்ள கற்களாக (Living Stones) இன்றும் தேவனுடைய மாளிகையில் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்.

வேதத்திலே, சவுலை தேவன் தன்னுடைய பணிக்காகத் தெரிந்து கொண்டார். அவரை பவுலாக மாற்றி புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் பெரிய பொறுப்பை அவர் கைகளில் கொடுத்தார். பவுலும் கிறிஸ்துவுக்காக அநேக பாடுகளை ஏற்றுக் கொண்டு, பல அடிகளின் மத்தியிலும்  ஊழியம் செய்தார், சிறையில் இருந்த போதும் அநேகரை கிறிஸ்துவின் வழியில் நடத்தினார். ஊழியத்தின் பாதையில் அநேக ஊழியர்களை உருவாக்கி, பல சபைகளை நிறுவினார். 1கொரி. 11:1ன் படி, கிறிஸ்துவை போல வாழ்ந்து காட்டியவர் பவுல். 

பிரியமானவர்களே, நம்முடைய முன்னோர்கள் நமக்கு தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இயேசுவை அறியாமலேயே மரித்துவிட்டார்கள். இன்னும் ஒரு சந்ததி அப்படி அறியாமல் நரகத்திற்கு செல்ல வேண்டாம். லிவிங்ஸ்டனைப் போல உங்களை தேவனுக்கென்று அர்ப்பணித்து, இருளில் இருக்கிற ஜனங்களுக்கும் இயேசு என்ற ஒளியை கொண்டு செல்வீர்களா? பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்து அநேகரை ஊழியராக உருவாக்குவீர்களா? தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் தனது ஊழியத்திற்கென்று தெரிந்து கொண்டிருக்கிறார். தேவன் எதிர்பார்க்கும் நபர் நீங்கள்தான், உன்னை கர்த்தருக்கென்று மிஷனெரியாக ஒப்புக்கொடுப்பாயா? “ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு ஆத்தும ஆதாய வீரன்” என்பதை மறந்து விடாதீர்கள். 
-    Mrs. எஸ்தர் காந்திராஜன் 

ஜெபக்குறிப்பு:
ஆத்துமபாரம் உள்ள மிஷனெரிகள் தோழமை ஊழியர்களாய் நம்முடன் இணைந்து செயல்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al