By Village Missionary Movement
Monday, 01-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 02-08-2022
எதிர்கால சீரழிவுகள்
“பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” - நீதி.22:6
பெத்தேல் சாமுவேல் ஐயாவைப் பற்றி நம்மில் அநேகர் அறிந்திருப்போம். அவர் தமது சிறுவர் இல்லத்தில் தங்கி பயிலும் மாணவர்களிடம் கொண்ட அணுகு முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். சில குறும்புக்கார மாணவர்கள் விடுதியை விட்டு ஆங்காங்கே ஊர் சுற்றி வருவதுண்டு. சில நேரம் கையும் களவுமாக தியேட்டர் வாசலிலும், கடை வீதிகளிலும் விடுதிக்காப்பாளரிடம் பிடிபடுவார்கள். இப்படி தவறு செய்த மாணவர்களைத் தண்டிப்பதற்காக சாமுவேல் ஐயாவிடம் கொண்டு வருவார்கள்.
அவரோ தனக்கு முன்பாக குற்றம் செய்த மாணவர்களைப் பார்த்து, “ஐயோ இவர்களா? என் பிள்ளைகளுக்கு தப்பு செய்யவே தெரியாது” என்று அன்புடன் கூறுவார். பின்பு தன் சக ஊழியர்களைப் பார்த்து அவர்கள் தியேட்டர் வாசலில் நின்று அங்கு படம் பார்க்க வரும் ஒவ்வொருவருக்காகவும் ஆத்தும பாரத்தோடு கண்ணீரோடு ஜெபிப்பதற்காக போயிருக்கலாம் என்று சொல்லி மாணவர்களை அனுப்பி வைப்பாராம். சிறு பிள்ளைகளை அடித்து தண்டித்து திருத்துவதை விட அன்பின் மொழியினால் திருத்த வேண்டும் என்பதை தரிசனமாகக் கொண்டிருந்தார் பெத்தேல் சாம் ஐயா அவர்கள். இவருடைய அன்பின் அணுகுமுறையைக் கண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்றைக்கு கர்த்தருடைய ஊழியத்தில் உலகில் பல நாடுகளில் தேவனுக்காகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தவறு செய்யும் பிள்ளைகளை பிரம்பினால் தண்டிப்பதைப் பற்றி வேதாகமம் சொல்லி இருக்கிறதை வாசிக்கிறோம். அதே நேரத்தில் பிள்ளைகளை இன்னும் அதிகமாக அன்பினால் திருத்த வேண்டும் என்று நமக்கு சற்று அதிகமாகவே வேதாகமம் போதித்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் கடுகடுவென காணப்படும் பெற்றோர்களாக இருக்கட்டும் அல்லது ஆசிரியர்களாக இருக்கட்டும், அவர்களிடம் பிள்ளைகள் கற்றுகொள்ளும்படியான செய்தி ஒன்றும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். மாறாக கசப்புணர்வும் எரிச்சலும் உடையவர்களாக மாறி பெரியவர்களாகும்பொழுது சமூக விரோதிகளாக அநேகர் மாறிவிடுகிறார்கள். நாம் நம்முடைய பிள்ளைகளை தேவனுடைய அன்பில் வசனத்தோடு போதித்து வழிநடத்த ஆண்டவர் கிருபை செய்வாராக!
- P.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய ஊழியர்களுடைய பிரயணங்களில் கர்த்தர் பாதுகாப்பைக் கட்டளையிட, அவர்களை வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250