By Village Missionary Movement
Wednesday, 27-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 28-07-2022
அற்புத தேவன்
“ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” – சங்கீதம் 50:15
இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த வேளை அது. ஒரு அமெரிக்க போர்வீரன் எப்படியோ மற்ற வீரர்களிடமிருந்து பிரிக்கப்பட்டார். அங்கு யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்தது. தன்னுடைய நாட்டின் போர்வீரர்களைப் பார்க்க முடியாதபடி எங்கும் புகைக்காடாய் காட்சியளித்தது. அவன் தனித்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு காட்டுக்குள் நுழைந்தான். அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு எதிரிநாட்டு வீரர்கள் அவனைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எங்காவது மறைவான இடம் இருக்கிறதா என்று சுற்றிலும் தேடினான். அங்கு சிறுசிறு குகைகள் இருந்ததைப் பார்த்தான். ஆனால் அது பாதுகாப்பானதாகத் தெரியவில்லை. ஆனால் வேறு வழியின்றி அதில் ஒரு குகையில் ஒளிந்துகொண்டான். அந்தக் குகையில் அமைதியாக அவன் இப்படியாக ஜெபித்தான் “ஆண்டவரே, என்னைச் சுற்றிலும் எதிரிகள் இருக்கிறார்கள். உமக்குச் சித்தமானால் என்னை விடுவித்தருளும்” என்று ஜெபித்தான். அந்தக் குகையில்தான் நானும் இருந்தேன். நான் யார் என்றுதானே யோசிக்கிறீர்கள்? சொல்கிறேன் பொறுங்கள். திடீரென்று “அந்தக் குகை வாயிலை அடைத்துப்போடு” என்று சொன்னார். சொன்னவர் என்னைப் படைத்தவரல்லவா? உடனே நான் கடகடவென்று என்னுடைய வலையை ஆண்டவர் எனக்குச் சொன்னபடி கட்டி அந்த வாயிலை அடைத்து, அமர்ந்து கொண்டேன். என்னை அந்த வீரன் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். காலடிகளின் சத்தம் கேட்டது. ஒவ்வொரு குகையிலும் போர்வீரர்கள் உள்ளே சென்று பார்த்துக் கொண்டிருந்தனர். போர்வீரன் இருக்கும் குகையை நெருங்கியபோது இது வலை பின்னப்பட்ட பழையதாக உள்ளதே. இதில் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து உள்ளே வராமல் போய்விட்டனர். அந்தப் போர்வீரன் மிகுந்த சந்தோஷத்தோடே ஆண்டவருக்கு நன்றி சொல்லி தன்னுடைய வழியில் போனான். நீங்கள் நினைக்கலாம் யார் அது என்று. அந்த வலையைப் பின்னினது சிறிய சிலந்திப் பூச்சியாகிய நான்தான்!
அன்பான மனிதர்களே, நான் ஒன்று யோசித்தேன். மனிதர்களாகிய உங்களை ஆண்டவர் எவ்வளவு நேசிக்கிறார் என்று மத். 6:26 இயேசுகிறிஸ்து சொன்னார் “எங்களைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷமானவர்கள்.” எனக்கு உதவி செய்ய யாருமில்லை, என்னை நேசிக்க யாருமில்லை என்று சொல்வீர்களானால், உங்களுக்கு உதவி செய்ய ஆண்டவர் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கின்றார். ஆகவே, எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்!
- Bro.ஆல்வின் ஜேக்கப்
ஜெபக்குறிப்பு:
தஞ்சாவூர் பணித்தளம் கும்பகோணத்தில் இன்று நடைபெறும் எழுப்புதல் விரும்புவோர் முகாமிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250