By Village Missionary Movement
Sunday, 24-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 25-07-2022 (Youth Special)
இது விந்தையல்லவா?
“…இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?” – மாற்கு 8:17
1. ஆலயத்தில் காணிக்கைப் பாடலின்போது சட்டைப்பையில் 10ரூ இல்லாததால், 50ரூபாயை எடுத்துப்போடும்போது, நமக்கு அந்த பணம் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் நண்பர்களுடன் ஷாப்பிங் மாலுக்கு போகும்போது அதே தொகை மிகவும் அற்பமாக தெரிகிறதே! இது விந்தையல்லவா?
2. ஆலயத்திற்கு சென்று 2 ½ மணிநேரம் ஆராதனையில் உட்காரும்போது அது மிக நீண்ட நேரமாக நமக்குத் தெரிகிறது. ஆனால் சினிமா பார்க்கும்போது அதே 2 ½ மணிநேரம் மிகக் குறைவாகத் தெரிகிறதே! இது விந்தையல்லவா?
3. வேதாகமத்தில் ஒரு அதிகாரத்தைப் படிப்பதற்குள் போரடித்து விடுவதைப் போலிருக்கிறது. ஆனால் நாவல்கள், கதை புத்தகங்களில் நூற்றுக்கணக்கான பக்கங்களைப் படிக்கும் போது போரடிக்காமல் இருக்கிறதே! இது விந்தையல்லவா?
4. சபையில் ஒரு ஸ்பெஷல் மீட்டிங்கை குறித்த அறிவிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்பே கேள்விப்படுகிற நாம், கடைசி நேரத்தில் தெரியவரும் ஒரு பார்ட்டிக்காக கூட்டத்தை தவிர்த்து விடுகிறோமே! இது விந்தையல்லவா?
5. கல்லூரி முடிந்தவுடன் 15 நிமிடம் ஜெபக்குழுவிற்கு அழைக்கும் தோழியிடம் “பஸ் போய்விடும்” என்று கூறி தோளில் பையைப் போட்டு வேகமாகச் செல்லும் நாம், தோழி கொடுக்கும் பிறந்தநாள் ட்ரீட் அன்று மட்டும் அப்படி சொல்வதில்லையே! இது விந்தையல்லவா?
6. செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை அப்படியே நம்புகிற நாம், வேதத்தில் சொல்லப்பட்டவைகளுக்கு மட்டும் சந்தேகத்தோடு கேள்வி எழுப்புவது விந்தையல்லவா?
7. ஒரு பஸ் டிரைவரை நம்பி, தைரியமாய் பஸ்ஸில் ஏறும் நாம் நம்மை உருவாக்கிய தேவனை நம்பி நம் வாழ்வை அவர் கைகளில் கொடுக்க தயங்குகிறோமே! இது விந்தையல்லவா?
8. வீட்டு செலவிற்காக எப்போதாவது கேட்கும் அம்மாவிடம் 100 ரூ கொடுக்க அத்தனை முறை யோசிக்கும் நாம், ஹெல்மெட் அணியாததற்காக, போலீசாரிடம், “டக்” என்று 100 ரூபாயை எடுத்துக் கொடுக்கிறோமே! இது விந்தைல்லவா?
9. ஆலயத்தில் ஒருவர் ஒரு ஆவிக்குரிய புத்தகத்தை வாங்கச் சொல்லும்போது, “வீட்டில் எக்ஸ்ட்ரா காசு கொடுக்கமாட்டார்கள்” என்று சொல்லும் நாம், லேட்டஸ்ட் மாடலில் ட்ரெஸ் தைக்க 500, 600 என்று கொடுக்கிறோமே! இது விந்தையல்லவா?
10. பரலோகத்தில் எப்படியாவது ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நாம், மரிக்க விரும்புவதில்லையே! இது விந்தையிலும் விந்தையல்லவா?
- Sis.கோகிலா
ஜெபக்குறிப்பு:
ஜெபக்கூடாரப் பணிகள் நிறைவடைந்து தேவநாம மகிமைக்கென்று விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250