By Village Missionary Movement
Tuesday, 19-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 20-07-2022
காத்திருத்தல் முடிவுக்கு வரும்
“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம் போல் இருக்கும்.” – நீதிமொழிகள் 13:12
ஈரானுக்கும் ஈராக்குக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் சிலர் கைதிகளாக ஈராக்கிற்கு கொண்டு செல்லப் பட்டனர். அதில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஒரு போர் வீரனின் மனைவி தன் கணவர் சிறை கைதியாக கொண்டு செல்லப்பட்டதை அறிந்து அவள் உள்ளம் பதைபதைத்தது. கணவனை எதிர்பார்த்து அழுதபடியே ஏங்கிக் காத்திருந்த அவளுக்கு பிரசவவலி ஏற்பட்டு பிள்ளையும் பிறந்தது. அவள் தன்னுடைய குழந்தைக்கு “என்சிலைட்டா” என்று பெயரிட்டாள். அதற்கு “என் காத்திருக்குதல் முடிவுக்கு வரும்” என்பது அர்த்தம். ஒவ்வொருமுறையும் அப்பெயரைச் சொல்லி அழைக்கும்போது தன் கணவருக்காக காத்திருக்குதல் வீண்போகாது என்றும், சீக்கிரம் அவர் வந்து விடுவார் என்ற நிச்சயம் தனக்குள் பெருகுவதை உணர்ந்தாள். பல வருடங்கள் காத்திருந்து ஒருநாள் போர்க் கைதிகள் விடுதலையாக்கப்பட்டு கப்பலில் வருகிற செய்தியைக் கேட்டு தாயும் மகளுமாக ஓடோடிச் சென்றனர். கணவரைக் கண்டவுடன், “என் காத்திருக்குதல் முடிவுக்கு வந்தது” என்று சொல்லி அகமகிழ்ந்தாள்.
காபிரியேல் என்னும் தூதன் கன்னி மரியாளிடம் வந்து, “கிருபை பெற்றவளே, ஸ்தீரிகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்று கூறி, “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் என்றும், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக” என்றும் சொன்னபோது முதலில் கலங்கி தவித்து இது எப்படியாகும்? என்று திகைத்தவள் பின் தேவனுடைய வார்த்தைக்குத் தன்னை அர்ப்பணித்து, சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தையை தனக்குள்ளே அப்படியே ஏற்றுக்கொண்டதின் விளைவு – நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து இப்புவிதனில் வந்துதித்தார். அந்நாட்களில் அநேக பரிசுத்தமான கன்னிப் பெண்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த தீர்க்கதரிசனத்தைக் கேள்விப்பட்டு தங்கள் வயிற்றில் இயேசு பிறக்க வேண்டுமென்று ஆவலுடன் காத்திருந்த வேளையில் மரியாளுக்கு அந்த வாய்ப்பு வந்தது. அவள் மனவிருப்பத்துடன் வார்த்தையையும், வார்த்தையானவரையும் ஏற்றுக்கொண்டு பாக்கியம் பெற்றாள். அவளின் காத்திருத்தல் வீண் போகவில்லை, இரட்சகர் வந்துதித்தார்.
நம் வாழ்விலும் கூட அனேக நேரங்களில் சில நன்மைகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பல நாட்கள் ஜெபித்தும், வார்த்தையையும் வாக்குத்தத்தங்களையும் பெற்றுக்கொண்டும் பதில் வர தாமதமாகும் போது சோர்ந்து போய் கர்த்தர் கொடுத்த வார்த்தையை பிடித்துக் கொள்ள மறந்து விடுகிறோம். கர்த்தரின் வார்த்தையின்படி சாராள் மூலமாக சந்ததி உண்டாக குறுக்கு வழியில் முயற்சி செய்ததை போல நாம் இருந்து விடக் கூடாது. “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும், விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்” என்ற வார்த்தையின்படி குறிக்கப்பட்ட நன்மையைப் பெற்றுக் கொள்ளும்வரை கர்த்தர் நமக்குக் கொடுத்த வார்த்தையை இருதயத்தில் அடைகாத்து, அதை பெற்றுக்கொள்ள முயற்சிப்போம், ஜெயத்தை பெறுவோம்.
- Mrs.வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
ஊழியம் செய்ய விரும்புவோர்களுக்கென்று வெளியிடப்படும் “கழுதைகள் கையேடு” என்ற பத்திரிக்கையின் வாயிலாக அநேக புதிய ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250