By Village Missionary Movement
Saturday, 16-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 16-07-2022
பார்வை எப்படி?
“...மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்...” – 1 சாமுவேல்.16:7
ஒரு செருப்புக்கடை முதலாளி ஒருவர் தன் கடையின் அடுத்த கிளையை குறிப்பிட்ட ஒரு தீவில் துவங்க விரும்பினார். அங்குள்ள கள நிலவரத்தை ஆராய்ந்துவர தன் இரு வேலைக்காரர்களை அனுப்பினார். அவர்கள் அந்தத் தீவிற்குச் சென்று எல்லோருடன் பேசிவிட்டு, தங்கள் முதலாளியிடம் சென்றார். முதலாமவர். “ஐயா, அந்தத் தீவில் இருப்பவர்களுக்கு செருப்புப் போடும் பழக்கமே இல்லை. நாம் அங்கே கடையைத் திறந்தாலும் நமக்கு வியாபாரம் ஆகாது” என்று கூறினார். இரண்டாம் நபர் “ஐயா, அந்தத் தீவில் இருப்பவர்களுக்கு செருப்பு பற்றிய அறிமுகமே இல்லை, நாம் அவர்களிடம் செருப்பின் பயன்பாட்டையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினால் நிச்சயமாக நன்றாக அங்கு வியாபாரம் செயலாம்” என்று கூறினார். ஆம், ஒரே சூழ்நிலைதான். ஆனால் இருவரின் பார்வையும் வெவ்வேறு விதமாக இருந்தது.
ஆம், பிரியமானவர்களே! இதைப் போன்றுதான் யோசுவாவும் காலேபும் மற்றவர்களோடு, கானானுக்கு வேவுபார்க்கச் சென்ற போது, கூட வந்தவர்களின் பார்வையும் யோசுவா மற்றும் காலேபின் பார்வையும் வித்தியாசமாக இருந்தது. சூழ்நிலை ஒன்று தான், ஆனால் பார்வைகள் வெவ்வேறானவை. ஆதி.39 –ஆம் அதிகாரத்தில் யோசேப்பைக் குறித்து வாசிக்கிறோம். போத்திபார் யோசேப்போடே கர்த்தர் இருக்கிறதைக் காண்கிறார். (ஆதி.39:3,4) போத்திபாரின் மனைவியோ. யோசேப்பின் புற அழகைக் காண்கிறாள். (ஆதி.39:6,7)
இன்று நம்முடைய பார்வை எப்படிப்பட்டதாய் இருக்கிறது? நாம் ஒருவரைப் பார்க்கும்போது அவருடைய தோற்றத்தை வைத்து மதிப்பிடுகிறோமா? சிந்தித்துப் பார்ப்போம். அதே நேரத்தில் நம்மைப் பார்க்கிறவர்களுக்கு நம்முடைய புற அழகை, நம்முடைய படிப்பை, தகுதியை, அந்தஸ்தை முக்கியப்படுத்திக் காட்டுகிறோமா? அல்லது இயேசுவை பிரதிபலிக்கிறோமா?
மேலும் நாம் இருக்கும் சூழ்நிலையை எப்படிப்பட்ட கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம்? இனி ஒன்றும் முடியாது என்றா அல்லது எல்லாம் முடிந்தது என்றா? நம்முடைய முயற்சி வீணென்று அவிசுவாசமாய் பேசுகிறோமா அல்லது விசுவாசப் பார்வையோடு சூழ்நிலைகளை எதிர்கொள்ளுகிறோமா? சூழ்நிலை எப்படிப்பட்டதாயிருந்தாலும் நம்மைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லவற்றையும் நாம் செய்வோம்! நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவன் நம்மோடு உண்டு! ஆகவே சோர்ந்து போகாமல் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பணியைத் தொடருங்கள். கர்த்தர் உங்களோடு இருப்பார்!
- Sis.ஐடா
ஜெபக்குறிப்பு:
திருச்சி பணித்தளத்தில் இன்று நடைபெறும் எழுப்புதல் விரும்புவோர் முகாமில் கலந்துகொள்ளும் நபர்களை தேவன் விசேஷித்த அபிஷேகத்தால் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250