By Village Missionary Movement
Monday, 04-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 04-07-2022 (Youth Special)
கவலைகளை விசாரிப்பவர்
“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” - 1பேதுரு 5:7
நாம் அனுதினமும் செய்தித்தாளை பார்க்கும்போது அநேகர் தற்கொலை செய்து மடியும் செய்திகளை வாசிக்கிறோம். சமீப நாட்களில் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறாததால் தற்கொலை என்று சாதாரணக் காரியங்களுக்கெல்லாம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இது ஏன் நடைபெறுகிறது? இதனை எப்படித் தடுக்கலாம்?
இந்த உலக வாழ்கையின் மகத்துவத்தை அறியாதவர்களே, விலையேறப் பெற்ற ஆத்துமாவை நஷ்டப்படுத்தி, நரகத்திலே இறங்கி விடுகிறார்கள். கஷ்டம், நஷ்டம் வரும்போது அவர்களைத் தட்டிக் கொடுத்து, ஆறுதலான வார்த்தைகளைப் பேசினால், வாழ்வில் அவர்களைத் தூக்கிவிட ஒருவர் இருந்தால், இந்த அவலங்கள் அவர்களுக்கு நேரிடுவதில்லை. நம்மைக் கருத்துடன் விசாரிக்க ஒருவர் இருக்கிறார் என்று அறிந்துமிருந்தால் இப்படி தவறான முடிவு எடுத்திருக்க மாட்டார்கள்.
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை உள்ளவர்களுக்கு கர்த்தராகிய இயேசுவை அறிமுகம் செய்ய ஆட்கள் இல்லை. ஆகவேதான் அவர்கள் மரித்துப் போகிறார்கள். இனிமேலாவது இந்த தவறான முடிவை யாரும் எடுக்காதபடி நம் இரட்சகரான இயேசுவை அறிமுகம் செய்வோம். அது நம் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது.
என் வாழ்வில் பள்ளி, கல்லூரி படிக்கும் நாட்களில் இரண்டு தங்க மெடல்கள் வாங்க கர்த்தர் உதவி செய்தார். ஆனாலும் மேற்படிப்பு சென்ற போது படிக்க முடியாமல் தோல்வி ஏற்படுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டது. தோல்வி என்பதை அறிந்திராத நான், அதை எதிர்கொள்ளப் பயந்தேன். தோல்வி ஏற்பட்டால் அதனால் ஏற்படும் நிந்தையை ஏற்றுக் கொள்ளவும் பயம், இந்த பயம் என்னை சாவுக்குத் தூண்டியது. இந்த தருணத்தில்தான் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டேன். தோல்வியை நிந்தையை ஏற்றுக் கொள்ளும் மனதைத் தந்தார். தோல்வியை, வாழ்க்கையின் அனுபவப் பாடமாக ஏற்றுக் கொள்ளச் செய்தார். மறுபடியும் தேர்ச்சி பெற்று ஆண்டவரை முழுவதும் பற்றிக் கொண்டேன். என் ஆசைகள் கனவுகள் முடிந்து போகவில்லை. தேவன் என்னை உயர்த்தி, வங்கியில் நேரடியாக ஆபிஸர் (Probationary officer) பதவியில் உட்கார வைத்தார். 35 ஆண்டுகள் வங்கிப் பணியை முடிக்கவும் கிருபை பாராட்டினார். ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், என் சரீரமும் ஆத்துமாவும் அழிந்து நரகத்தில் இறங்கியிருக்கும். ஆனால் அதையெல்லாம் மாற்றி, என் வாழ்வைச் சீரமைத்தவர் இயேசு மாத்திரமே.
என் அன்பு சகோதர சகோதரிகளே, மாணவ செல்வங்களே, தோல்வியைக் கண்டு பயந்து விடாதீர்கள்; துவண்டு போகாதீர்கள், நம் கவலை கண்ணீரை மாற்றுகிற தேவனிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படையுங்கள். அவர் உங்கள் கோணலான வாழ்க்கையை நேராக்குவார். ஆமென்.
- Mrs.புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
இப்புதிய மாதத்தில் ஊழிய எல்லைகள் விரிவாக்கப்பட, தேவன் கொடுத்த தரிசனங்கள் தடையில்லாமல் நிறைவேற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250