By Village Missionary Movement
Tuesday, 21-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 22-06-2022
“என் சகோதரரே அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.” - யாக்கோபு 3:1
ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஓர் மாபெரும் கலையரங்கில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுவிசேஷகர்களும் கிறிஸ்தவ தலைவர்களும் அமர்ந்து உலகப் பிரசித்தி பெற்ற சுவிசேஷகர் பில்லி கிரஹாம் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். செய்தி நடுவிலே தனது ஊழிய அனுபவத்தில் உள்ள சில சம்பவங்களை பகிர்ந்து கொண்டார் பில்லி. “நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். ஒவ்வொரு முறையும் தேவ ஜனமாகிய கூட்டத்தின் முன் நின்று பிரசங்கம் செய்யும்பொழுது என் முழங்கால்கள் நடுங்கி தள்ளாடும்’’ என்றார். பில்லி கிரஹாம் அவர்களுக்கு செய்தி கொடுக்க தெரியாததினால் இப்படி சொன்னார் என்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. எவ்வளவேனும் தகுதியற்ற தன்னை தேவன் தம்முடைய கனமான ஊழியத்தில் அவருடைய வார்த்தையை பேச தனக்குத் தந்த வாய்ப்பை நினைத்து தாழ்மையுடனும், எளிமையுடனும் இப்படியாக கூறுகின்றார்.
இந்த உலகத்திலேயே மிகப்பெரிய வேலை எது என்றால் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவனாகிய கர்த்தருக்கு செய்யும் ஊழியம்தான். ஊழியத்திற்கு வந்துள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு கவனமாக செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பிரசங்கிகளின் வேந்தன் என்று அழைக்கப்படும் சார்லஸ் C.H. ஸ்பர்ஜன் அவர்கள் கூறும்பொழுது இப்படியாக சொல்கிறார், ‘’பிரசங்கத்தை கேட்டும் மனம்திரும்பாத பாவிக்கு கடுமையான ஆக்கினை வரும்போது மனம் திரும்பாமலேயே பிரசங்கம் பண்ணும் பிரசங்கியாருக்கு எவ்வளவு கொடிதான ஆக்கினை வரும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்’’ என எச்சரிக்கிறார். இன்றைக்கு பிரசங்க பீடத்தில் நின்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிவிட்டு இதை கர்த்தர் பேசினார் என்று பேசும் துணிகரக்காரர்கள் பெருகிவிட்டனர். ஆகவே தான் யாக்கோபு தன் நிருபத்தில் எழுதும்பொழுது அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து போதகராகாதிருப்பீர்களாக என்று எச்சரிக்கிறார்.
அப்.பவுல் கொரிந்தியர் சபைக்கு நிருபம் எழுதும்பொழுது, நாங்கள் தேவ வசனத்தை கலப்பாய் போதியாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்ட பிரகாரமாக தேவ சந்நிதியில் துப்புரவாகவும், இடறலற்றவர்களாகவும் பிரசங்கிக்கிறோம் என எழுதுகிறார். கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான சகோதரரே, ஊழியம் செய்வது நல்லது அப்படி செய்யப்படுகின்ற ஊழியமானது தேவனுடைய வழிநடத்துதலின்படி காணப்பட வேண்டும். “தேவனுடைய ஊழியத்தை தேவனுடைய வழியில் செய்ய வேண்டுமென்று” அருமையாக ஒரு ஊழியர் கூறினார். நான் பேசுவது செய்வது எல்லாம் ஊழியம் ஆகிவிடாது. தனி ஜெபம் இல்லாமல், வேதத்தை தியானிக்காமலும் ஒருவர் செய்தி கொடுப்பாரென்றால் அவருடைய வாயிலிருந்து மரண வாசனை வெளிப்படுகிறது என லியோனார்டு ரேவன்ஹில் மிகத் தெளிவாக கூறியுள்ளார். தேவனுடைய வார்த்தையை போதிக்கிறவர்கள் மிகுந்த கவனத்துடன் ஊழியம் செய்ய வேண்டும். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறாரே பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள் நடுக்கத்துடனே களிகூருங்கள். ஆமென்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
அலுவலகப் பணிக்கென்று கணினி மற்றும் லேப்டாப் வாங்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250