By Village Missionary Movement
Wednesday, 15-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 16-06-2022
ஒரு நன்மையுங் குறைவுபடாது
“சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.” - சங்கீதம் 34:10
பண்டித ராமாபாய் அவர்கள் தேவன் மேல் கொண்டிருந்த அன்பால் புனே மாவட்டத்தில் கெட்காவுங் கிராமத்தில் “முக்தி மிஷன்” என்ற இல்லத்தை ஆரம்பித்து ஆதரவற்ற சிறு குழந்தைகள் முதல், முதிர் வயதுள்ள பெண்கள் வரை ஆதரித்து வந்தார்கள். சிறந்த ஜெப வாழ்க்கையும், சிறந்த கிறிஸ்தவ நெறிமுறைகளையும் கொண்டிருந்த இவர்கள் தன் இல்லத்தில் உள்ள ஏழைப்பிள்ளைகளை, பெரியோர்களை மிகவும் அன்புடன் சிறப்பாக பராமரித்து வந்தார்கள்.
ஒருமுறை இல்லத்திலுள்ளவர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பசிப்பிணியில் வாடினர். பண்டித ராமாபாய் தேவனைச் சார்ந்து, மிகுந்த விசுவாசத்துடன் வறுமை நீங்க ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தார். ஜெபம் முடியும் வேளையில் ஒரு செல்வந்தர் வாசலில் நின்று
கொண்டிருந்தார். உள்ளே அழைத்த அம்மையாரிடம், “அம்மா நான் தானியங்களை ஏற்றி வந்த என் வண்டியின் சக்கரத்தின் அச்சாணி முறிந்து, தங்கள் இல்லத்தின் முன்னால் நின்றுவிட்டது. பாரம் தாங்காமல் நின்ற வண்டியிலிருந்த தானிய மூட்டைகளை வீட்டிற்கோ, சந்தைக்கோ என்னால் கொண்டு செல்ல இயலாது. எனவே இந்த தானிய மூட்டைகளை தங்கள் இல்லத்திற்கே கொடுத்து விடுகிறேன். தாங்கள் இதை ஏற்றுக் கொள்வீர்களா?” எனக் கேட்டார். அவைகளைப் பெற்றுக் கொண்ட அம்மையார் செல்வந்தரை அனுப்பிவிட்டு முழங்காலில் நின்று ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள். ஆம், வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின ஆண்டவர், அவர்களை ஒரு குறைவின்றி போஷித்தார். சோர்ந்து போயிருந்த எலியா தீர்க்கதரிசியை காகத்தைக் கொண்டு போஷித்தார். ஆம், அவருடைய பிள்ளைகளின் வாழ்வில் தம்முடைய மகத்துவத்தையும் மகிமையையும் விளங்கச் செய்கிற தேவனாயிருக்கிறார்.
எனக்கன்பானவர்களே! ஆண்டவரைத் தேடுவோருக்கு ஒரு குறைவும் ஏற்படாது. நாம் தேவனிடம் விசுவாசத்தோடு கேட்கும் எந்த ஜெபத்திற்கும் எந்த வழியிலாவது பதில் தர தேவன் வல்லவராயிருக்கிறார். அதிசயங்களைச் செய்கிற தேவன் நம் வாழ்வின் எல்லாத் தேவைகளிலும் அற்புதமாய் நன்மையைத் தருவார். “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
Whats App, Twitter, YouTube, email மூலம் வெளிவரும் தின தியான செய்தியை வாசிப்போர், கேட்போர் கர்த்தருக்கென்று கனி கொடுக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250