By Village Missionary Movement
Thursday, 02-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 02-06-2022
நம்மேல் விழுந்த கடமை
“…நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்“ - மாற்கு 16:15
நான் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் தேவக்கிருபையினால் பாலிடெக்னிக் முடித்தேன். சில மாதங்களாக சரியான வேலையில்லாமல் இருந்தபோதிலும், தேவன் கிருபையாய் ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்தார். அற்புதமாய் ஆண்டவரை ஏற்றுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயம் சென்று ஒரு சராசரி கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் மாலை வேளையில், சகோதர் ஒருவர் சிறு பிள்ளைகளுக்கு Sunday class எடுத்துக் கொண்டிருந்தார். அவர் 5 நாட்கள் வேலை செய்து, மீதமுள்ள 2 நாட்கள் ஊழியம் செய்து வருவதாகக் கூறினார். அவரிடம் சரியான வாகன வசதி கிடையாது. கிட்டத்தட்ட 10 கி.மீ தூரம் வரையிலும் சைக்கிளில் சென்று ஊழியம் செய்து வந்தார். அவர் சைக்கிளில் இத்தனை கி.மீ செல்வது எனக்கு ஆச்சரியமாகவும் அதே வேளையில் எனக்கு பாரமாகவும் இருந்தது. அவர் என்னையும் ஊழியம் செய்யும்படி அழைத்துக் கொண்டே இருப்பார். ஒரு நாள் அவரின் தொந்தரவு தாங்காமல் “சரி வருகிறேன், ஆனால் ஒரு கன்டிஷன் நான் உங்களை என்னுடைய இருசக்கர வாகனத்தில் கூட்டிக்கொண்டு கிராமங்களில் போய் விடுவேன் என்னை ஊழியம் செய்யும்படி கட்டாயப்படுத்தக் கூடாது” என்றேன்.
முதல் வாரம் சென்றது. இரண்டாவது வாரம் அவர் என்னை வசனம் மட்டும் சொல்லிக் கொடுங்கள்” என்றார். வசனம் தானே என சொல்லிக் கொடுத்தேன். அடுத்து “பாட்டு சொல்லிக் கொடுங்கள்” என்றார். அதையும் சரி பாட்டுதானே என நினைத்தேன். அடுத்து “கதை சொல்லுங்கள்” என்றார். சரி கதை தானே சொல்லுவோம் என்று சொன்னேன். ஒருநாள் அமர்ந்து யோசித்த போது தான், என்னையும் அறியாமல் ஊழியம் செய்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். எது சரி வராது என நினைத்து, “இனிமேல் நான் வரமாட்டேன்” எனக் கூறினேன். ஆனால் தேவனோ, அவரோடு செல்லவும் அவர் சொல்லும் வேலையை செய்யவும் எனக்கு கட்டளையிட்டு சொன்னார். இப்படியாக என் ஊழியம் ஆரம்பித்தது. இன்று அநேக கிராமங்களில் சிறு பிள்ளைகள் மத்தியில் ஊழியம் செய்து வருகிறேன்.
அன்பானவர்களே! நாமும் அநேக நேரங்களில் ஊழியம் நமக்கானது அல்ல என நினைக்கிறோம். ஆனால் வேதம் கூறுகிறது, “சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது நம் மேல் விழுந்த கடமையாய் இருக்கிறது” என்று! இயேசுகிறிஸ்துவும் தன் கடைசி நாட்களில், “ நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” எனக் கூறுகிறார். அப்படியானால், ஊழியம் என்பது நம் ஒவ்வொருவரின் கடமை மற்றும் தேவனின் கட்டளை! எனவே நம்மால் இயன்ற ஊழியங்களைச் செய்வோம். தேவ ஆசீர்வாதம் பெறுவோம்.
- Bro. மாரியப்பன்.
ஜெபக்குறிப்பு:
நமது மிஷனெரிகள் ஒவ்வொருவரையும் தேவன் வல்லமையாய் எடுத்துப் பயன்படுத்த, தேவன் கொடுத்த திட்டங்கள் தடையில்லாமல் நிறைவேற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250